TN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மீண்டும் நிதித்துறையை ஒதுக்க ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலால் அவரின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தங்கம் தென்னரசு முதல்வருக்கு ஒரு REQUEST வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வராக 2021ல் ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கியதில் பல்வேறு விதமான கருத்துக்கள் இருந்தாலும், அனைவருமே சரியான தேர்வு என்று கிரீன் டிக் அடித்தது நிதித்துறையை பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இடம் வழங்கியதை தான். காரணம் சர்வதேச அளவில் பெரும் நிறுவனங்களான லெஹ்மன் பிரதர்ஸ், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் போன்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் நிர்வாக அதிகாரியாகவும், ஆலோசகராகவும் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மிகுந்தவர் பி டி ஆர்.
இப்படிப்பட்ட நிலையில் தான் கடந்த ஆண்டு பிடிஆர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது, அது முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதியும் மருமகன் சபரீசனும் இரண்டே ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்து விட்டனர் என்று கூறுவது போல் பேச்சுக்கள் இடம் பெற்று இருந்தது. இந்நிலையில் அது தான் பேசியது இல்லை, அந்த ஆடியோ பொய்யானது என பி டி ஆர் விளக்கம் அளித்தார்.
அடுத்த சில நாட்களிலேயே நிதித்துறை அமைச்சராக இருந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அந்த பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு தகவல் தொழில்நுட்ப துறை அவருக்கு வழங்கப்பட்டது. நிதித்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைத்தார் முதல்வர் ஸ்டாலின். இருந்தாலும் நிதித்துறையை பிடிஆருக்கு கொடுக்க வேண்டும் என்ற குரல் திமுகவிற்குள்ளேயே எழுந்து வந்தது.
இந்தநிலையில் அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் நிதித்துறையில் மீண்டும் ஒரு மாற்றத்தை கொண்டு வர ஸ்டாலின் டிக் அடித்துள்ளதாக சொல்கின்றனர். தற்போது நிதித்துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு தனக்கு கல்வித்துறை வேண்டும் என கேட்டதாக தெரிகிறது. இதனையடுத்து தங்கம் தென்னரசுக்கு உயர்கல்வித்துறையை ஒதுக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் நிதித்துறையை மீண்டும் பிடிஆர் வசம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த அமைச்சரவை மாற்றம் வரும் போது பிடிஆருக்கு நிதித்துறையை மீண்டும் கொடுத்துவிட வேண்டும் என ஸ்டாலின் ஏற்கனவே முடிவெடுத்து விட்டதாகவும் திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.