தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம்? - பரிசீலனையில் ஐவர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் மூன்று தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. இந்த தோல்வியின் எதிரொலியாக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பதவி விலகினார். சிலகாலம் காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவரே இல்லாமல் இருந்த நிலையில் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமித்தது. மூன்றாண்டுகாலம் காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் இருந்த நிலையில் கடந்த 2019 ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்தது. 2019ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலையும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையும் கே.எஸ்.அழகிரியின் தலைமையில்தான் காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டது. 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 10 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு 9 மக்களவை தொகுதிகளிலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் 25 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 18 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.