ஓபிஎஸ் கூடாரம் காலி..திமுகவில் மனோஜ் பாண்டியன்!குஷியில் தென்மாவட்ட திமுக!
அதிமுகவின் எம்.எல்.ஏ.,வாக இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மனோஜ் பாண்டியன் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இது ஓபிஎஸ்-க்கு மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்வர் ராஜா அவர்கள். நீண்டகாலமாக ஓபிஎஸ்ஸின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஆதரவு அளித்து வந்த இவர், சமீபத்தில் திடீரென திமுகவில் இணைந்தார். இது தென் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ் அணிக்குக் கிடைத்த முதல் பெரிய அடி என்று அப்போது கணிக்கப்பட்டது.
மறைந்த அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகனான மனோஜ் பாண்டியன் தற்போது திருநெல்வேலி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தார். அடிப்படையில் வழக்கறிஞரான அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாக பிரிந்தபோது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளராக தொடர்ந்து வந்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் ஓபிஎஸ் தரப்பில் தான் இருந்து வந்தார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை நடத்தி வரும் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலாவுடன் இணைந்து அதிமுகவை கைப்பற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். எனினும் சசிகலாவை தீவிரமாக மனோஜ் பாண்டியன் எதிர்த்து வந்த நிலையில், சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை சந்தித்ததால் அதிருப்தியில் திமுகவில் இணைந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் அவரது வலது கரம் போல செயல்பட்டு வந்த மனோஜ் பாண்டியன் தற்போது திமுகவில் இணைந்து இருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஓபிஎஸ் தரப்பின் நிழலாகவே கருதப்பட்டவர் மனோஜ் பாண்டியன். குறிப்பாக, பொதுச் செயலாளர் பதவிக்கான சட்டப் போராட்டங்களில், ஓபிஎஸ்ஸுக்குத் துணையாகவும், ஆலோசகராகவும் இருந்தவர். இப்படி, மிக நெருக்கமான ஒருவரே விலகி, ஆளுங்கட்சியான திமுகவில் இணைந்திருப்பது ஓபிஎஸ்-க்கு மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று மனோஜ் பாண்டியன் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.





















