Jallianwala Bagh Renovation: ரத்த சரித்தரத்தை மறைக்கும் வண்ண விளக்குகள்! மோடி செய்தது - சரியா?
ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப்போராட்டத்தில் இந்தியா கொடுத்த விலை மிகப்பெரியது. சுதந்திரப் போராட்டத்தில் எத்தனையோ துயரங்கள் நடந்திருந்தாலும், இப்போது நினைத்தாலும் பதைபதைக்க வைக்கும் ஒரு சம்பவம் 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை தான்.
ஜெனரல் டயர் என்ற கொடுங்கோலன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை சுட உத்தரவிட்டதன் அடிப்படையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாரபட்சம் பார்க்காமல் காக்கை, குருவிகளை சுடுவதைப்போல சுட்டுக்கொல்லப்பட்டனர். 4 சுவர்களுக்குள் மாட்டிக்கொண்ட அப்பாவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். 100 ஆண்டுகளைக் கடந்த இந்த பெருந்துயரம் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற இடத்தை சீரமைத்து, அழகுபடுத்தியிருக்கிறது மத்திய அரசு. இரவு நேரங்களில் கண்கவர் வண்ண விளக்குகளால் ஒளிரும் இந்த இடத்தை தான் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இது தான் தற்போது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. ஜாலியன் வாலாபாக் செல்லும் குறுகிய வழியில் உள்ள சுவற்றில் தற்போது சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றது. சுவற்றில் குண்டுகள் பட்ட இடங்கள் அதன் தனித் தன்மையை இழந்திருக்கின்றன. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த மொத்த இடமும் சீரமைப்பிற்குப் பிறகு மாறிப்போயிருக்கிறது. அப்படி ஒரு படுகொலை நடந்த உணர்வையே அந்த இடம் பிரதிபலிக்கவில்லை. ஒரு பெரும்துயரம் நடைபெற்ற இடத்தை வண்ண விளக்குகளை ஒளிரச்செய்து கொண்டாடுவது சரிதானா? என்று அடுக்கடுக்காக குற்றம்சாட்டுகளை முன் வைக்கின்றனர் விமர்சகர்கள். காங்கிரஸ் ஆட்சியில் கண்டுகொள்ளப்படாமல் சேதமடைந்து கிடந்த ஜாலியன் வாலாபாக்கை, வரலாற்றுச் சின்னத்தை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் அதை சீரமைத்திருக்கிறார். அதை வரவேற்காமல் வழக்கம்போல காங்கிரஸ் அதில் அரசியல் செய்கிறது என்று குற்றம்சாட்டுகின்றனர் பாஜகவினர். தியாகம் என்றால் என்ன என்று தெரியாதவர்களால் தான் ஜாலியன் வாலாபாக்கில் உயிரிழந்தவர்களை கொச்சைப்படுத்த முடியும். தியாகியின் மகனாகிய என்னால் இந்த அவமரியாதையை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று தெரிவித்திருக்கிறார் ராகுல்காந்தி.
வரலாற்று நிகழ்விடங்களை சீரமைப்பது என்பது அவை எப்படி இருந்ததோ, அதன் எந்த தோற்றமும் மாறாமல் அப்படியே சீரமைப்பது தான் அந்த இடத்தின் முக்கியத்துவத்தைத் தக்கவைக்கும். வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்ற இடத்திற்குச் சென்றால் அது அந்த வரலாற்றை பார்வையாளர்களுக்கு கடத்தும் வகையில் இருக்க வேண்டும். பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் எல்லாம் அப்படியே தான் பாதுகாக்கப்படுகின்றன. பாதி அழிந்திருக்கிறது என்பதற்காக அவைகள் வரையப்படுவதில்லை.
அப்படி வரைந்தால் அது வரலாற்றை சிதைத்துவிடும். இந்த தவறு தான் ஜாலியன் வாலாபாக் விஷயத்தில் நடந்திருக்கிறது என்று குற்றம்சாட்டுகின்றனர் சமூக வலைதளவாசிகளும் எதிர்கட்சியினரும். உங்களுக்கு வரலாறு தெரியாது என்றால், உங்களுக்கு எதுவும் தெரியாது; தான் மரத்தின் ஒரு பகுதிதான் என்று தெரியாத இலையைப் போன்றவர்கள் நீங்கள் என்ற பிரபல எழுத்தாளர் மைக்கேல் க்ரிக்டனின் இந்த வாசகம் இந்த நிகழ்வுக்குப் பொருந்தும்.