Stalin on Pongal Gift Money; கருணை இருக்கு...நிதி இல்லை; பேரவையில் ஸ்டாலின் விளக்கம்...
பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்காததற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசிடம் கருணை இருக்கு ஆனா நிதி இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகைக்கு, அரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு வழங்கியது. அதனுடன் பரிசுப் பணம் வழங்கவில்லை என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
பொங்கல் பரிசுப் பணம்... எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
2025 பொங்கல் பண்டிகைக்கு, தமிழ்நாடு அரசு சார்பில், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு, வேட்டி, சேலை அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. குறிப்பாக அதிமுக ஆட்சியில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்கப்பட்ட நிலையில், ஸ்டாலின் அரசு வாங்கவில்லை எனவும், தங்கள் ஆட்சியில் 2,500 ரூபாய் வழங்கப்பட்டபோது, அதை 5,000 ரூபாயாக வழங்க வேண்டும் என ஸ்டாலின் கூறியதாகவும், ஆனால், தற்போது 1,000 ரூபாய் கூட வழங்கவில்லை எனவும் அதிமுக குற்றம்சாட்டியது. பொங்கல் பரிசுப் பணம் வழங்காததற்கு, திமுக கூட்டணி கட்சிகளே சில அதிருப்தி தெரிவித்தன.
பொங்கல் பரிசுப் பணம்... நிதி அமைச்சர் விளக்கம்
இவ்வாறு, பொங்கல் பரிசுப் பணம் வழங்காததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசிடம் பொங்கல் பரிசுப் பணம் வழங்க போதிய நிதி இல்லை என, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார். குறிப்பாக இந்த ஆண்டு, நிதி நெருக்கடி உள்ளதாலேயே, பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் வழங்க முடியவில்லை என அவர் கூறிய அவர், மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிதியை சரிவர வழங்காததால், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். பேரிட நிவாரண நிதி, கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி உள்ளிட்டவற்றை வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருவதாகவும், அதனால் தமிழ்நாடு அரசிடம், பொங்கலுக்கு ரொக்கம் வழங்கும் அளவிற்கு நிதி இல்லை என்றும், அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார்.
கருணை இருக்கு... ஆனா நிதி இல்லை - ஸ்டாலின்
இந்த நிலையில், இன்று(11.01.2025) சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொங்கல் ரொக்கப் பரிசு வழங்காதது குறித்து விளக்கமளித்தார். அப்போது, அரசிடம் கருணை இருக்கிறது, ஆனால் நிதி இல்லை என தெரிவித்தார். அரசின் வருவாய் அதிகரித்துள்ள போதிலும், திமுக அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளதால், மற்ற செலவுகளுக்கு நிதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசின் பல திட்டங்களுக்கு அதிகமான பங்கு நிதியை தமிழ்நாடு அரசே வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால், நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் விளக்கமளித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

