Gingee Masthan| கோரிக்கை வைத்த நரிக்குறவர்கள்பாதியில் எழுந்து சென்றமஸ்தான் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
செஞ்சி அருகே நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தின கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் புறப்பட்டு சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை ஊராட்சியில் நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பிலால் தலைமையில் நடைபெற்றது.இதில் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செஞ்சி மஸ்தான், செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன்,பிரபுசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்பொழுது நரசிங்கராயன்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதாகவும்,இதனால் நோய் தொற்று ஏற்படுவதாகவும்,குடிநீர் முறையாக வழங்குவது இல்லை என்றும்,100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டு வைத்து கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக ஜே ஜே நகர் பகுதியில் வசிக்கும் 40- க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் மழைநீர் தேக்கி நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில்,அப்பகுதி மக்கள் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் இதுகுறித்து இன்று கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட நரிக்குறவர் மக்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தானிடம் முறையிட்டும் கண்டு கொள்ளாமல் சென்றதால் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பேசிய ஜே ஜே நகரில் வசிக்கும் நரிக்குறவர் மக்கள் தங்களுக்கு அடிப்படை தேவைகளை தான் கேட்பதாகவும் ஆனால் அதை யாரும் செய்து கொடுப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு வைத்தனர் மேலும் எம்ஜிஆர் இருந்தால் எங்களுக்கு எல்லாவற்றையும் செய்வார் ஆனால் இப்போது இருக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சியில் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.





















