”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜக
நான் கேட்குற 2 விஷயத்தை பண்ணி கொடுங்க, நீங்க சொல்றதுக்கு நான் ஒத்து வர மாட்டேன் என விடாப்பிடியாக இருக்கிறார் ஏக்நாத் ஷிண்டே. மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்தும் முதலமைச்சரை அறிவிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது பாஜக.
மகாராஷ்டிட சட்டப்பேரவை தேர்தல் பாஜக, ஏக் நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா, அஜித் பவார் தரப்பு தேசியவாத காங்கிரஸ்-க்கு சாதகமாக அமைந்தது. இந்த கூட்டணி 234 தொகுதிகளில் வென்று மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக மட்டும் 132 இடங்களிலும், சிவசேனா 57 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.
ஆனால் முதலமைச்சர் யார் என்பதில் இன்னும் பேச்சுவார்த்தை முடிந்தபாடில்லை. முதலமைச்சர் பதவிக்கு பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ்-க்கும், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் போட்டி இருந்தது. இறுதியில் ரேஸில் இருந்து பின்வாங்கினார் ஷிண்டே. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் நாங்கள் தடையாக இருக்க மாட்டோம், பாஜகவின் முடிவை ஏற்றுக் கொள்வோம் என சொல்லி பிரச்னையை முடித்து வைத்தார்.
ஆனால் துணை முதலமைச்சர் பதவியும், உள்துறையும் தங்களுடைய கட்சிக்கு தான் வேண்டும் என்பதில் ஷிண்டே விடாப்பிடியாக இருப்பதால் பாஜக என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. துணை முதலமைச்சர் பதவியை கொடுக்க கூட பாஜக தயாராக இருக்கிறது, ஆனால் உள்துறையை கொடுக்க மாட்டோம் என பிடிவாதமாக இருப்பதாக சொல்கின்றனர்.
கடந்த ஆட்சியில் முதலமைச்சர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொடுத்த போதும் உள்துறையை தங்கள் வசமே வைத்திருந்தது பாஜக. பவர்ஃபுல் துறையாக இருக்கும் உள்துறையை 2 கட்சிகளும் குறிவைத்துள்ளதால் கூட்டணிக்குள்ளும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு அந்த துறையை கொடுத்தால் உத்தவ் தாக்கரே பக்கம் இருக்கும் சிவசேனா கட்சியினரையும் நமது கூட்டணிக்கு கொண்டு வருகிறேன் என்றும் ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வராததால் முதலமைச்சரை அறிவிப்பதிலும் கூட்டணிக்குள் குழப்பம் இருக்கிறது. கூட்டணியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பாஜக என்ன செய்யப் போகிறது இல்லையென்றால் ஏக் நாத் ஷிண்டே ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காக இறங்கி வரப் போகிறாரா என்று விவாதம் நடந்து வருகிறது.