Thirumavalavan X Post |ஆட்சியில் பங்கு.! திமுகவுக்கு திருமா செக்! 2026-ல் கூட்டணி ஆட்சியா?
விசிக தலைவர் திருமாவளவன், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று தான் பேசிய பழைய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதை டெலிட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் அமெரிக்க பயணத்தை முடித்து தமிழ்நாடு திரும்பிய நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது விவாதமாக மாறியுள்ளது.
விசிக சார்பில் மதுஒழிப்பு மாநாடு வருகிற அக்டோபர் 2ஆம் தேதி நடைப்பெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு திருமாவளவன் அழைப்பு திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் விசிக அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக நெருக்கம் காட்டுகிறதா என்று விமர்சிக்கப்பட்டது. அதுவும் இல்லாமல் தமிழக அரசுக்கு எதிராக கடந்த சில மாதங்களாகவே திருமாவளவன் கருத்து சொல்லி வருவது இந்த விவாதத்தை மேலும் பற்றவைத்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கேள்வி எழுப்பப்பட்ட போது, அதிமுக-வை அழைப்பது என்பது விசிகவின் முடிவு. அழைப்பை ஏற்றுச் செல்ல வேண்டுமா என்பதை அந்தந்தக் கட்சியினர் முடிவெடுப்பார்கள். அதில் வேறு யாரும் கருத்துச் சொல்ல முடியாது’ என தெரிவித்தார்.
இதனிடையே முதல்வர் ஸ்டாலின் தனது 14 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு இன்று தான் சென்னை திரும்பினார். இந்த விவகாரம் தொடர்பாக அவரிடமும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, திருமாவளவன் தெளிவாக சொல்லிவிட்டார். நான் சொல்லவேண்டிய அவசியமில்லை. இதனை அரசியலோடு முடிச்சு போட வேண்டாம் என அவர் சொல்லியதை தான் நானும் சொல்கிறேன் என்றார்.
இந்த நிலையில் தான் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தான் பேசிய பழைய வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார் திருமா. ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த வீடியோவை டெலிட் செய்தார். பின்னர் மீண்டும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு, கடைசி மனிதனுக்கு ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என பதிவிட்டு அதையும் டெலிட் செய்துவிட்டார். இப்படி இரண்டு முறை திருமா தன் பதிவை நீக்கியது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை கிளப்பியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நேரத்தில் திருமா இப்படி பதிவுகளை போட்டு நீக்குவது திமுகவினர் மத்தியில் விவாதமாக மாறியுள்ளது.