சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
அரசுப்பள்ளி சத்துணவில் பல்லி விழுந்ததால் 44 மாணவர்கள் மயக்கம், மாணவர்களுக்கு திமுக அரசு வழங்குவது சத்துணவா? விஷ உணவா? அன்புமணி கேள்வி.

கோவை அரசுப்பள்ளி சத்துணவில் பல்லி விழுந்ததால் 44 மாணவர்கள் மயக்கமடைந்த நிலையில், மாணவர்களுக்கு திமுக அரசு வழங்குவது சத்துணவா? உயிரெடுக்கும் விஷ உணவா என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘’கோவை மாநகரம் கவுண்டம்பாளையம் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்ததால் 44 மாணவ - மாணவியர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நல்வாய்ப்பாக அனைத்து மாணவர்களும் உயிர் பிழைத்து விட்ட போதிலும், அவர்களுக்கு ஏதேனும் நடந்திருந்தால் என்னவாகியிருக்கும்? என்பதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.
திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்
கோவை மாநகராட்சி பள்ளிகளின் சமையலறைகள் தூய்மையின்றியும், பராமரிப்பின்றியும் கிடப்பதுதான் இந்த நிலைக்கு காரணம் ஆகும். மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதற்கு முன் அதன் தரம் பரிசோதிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை நடைமுறை கூட இந்த விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. திமுக ஆட்சியில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுகிறதா அல்லது நச்சு உணவு வழங்கப்படுகிறதா? என்பதே தெரியவில்லை. இந்த நிகழ்வுக்கு திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
யாரும் வாயே திறக்காதது ஏன்?
தமிழ்நாட்டில் எது நடந்தாலும் அதை தமது சாதனையாக காட்டிக் கொண்டு, விளம்பரங்களை வெளியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்வுக்கு பொறுப்பேற்காதது ஏன்? மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்தது குறித்து முதலமைச்சரோ, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரோ, சமூகநலத்துறை அமைச்சரோ இது வரை வாயைத் திறக்காதது ஏன்? இந்த நிகழ்வு குறித்து யாருக்கும் தெரியாமல் மூடி மறைக்க அரசு முயன்றது ஏன்?
சத்துணவில் பல்லி விழுந்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் முதலமைச்சரும், சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் தரமான சத்துணவு வழங்கப்படுவதையும், குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதற்கு முன் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உணவை சுவைத்துப் பார்ப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்’’ என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்























