Hindu Muslim Unity : மசூதியில் தீ மிதி திருவிழா!ஒன்றாக இறங்கிய முஸ்லீம், இந்துக்கள்!இதான் தமிழ்நாடு!
Hindu Muslim Unity : மசூதியில் தீ மிதி திருவிழா!ஒன்றாக இறங்கிய முஸ்லீம், இந்துக்கள்!இதான் தமிழ்நாடு!
சிவகங்கையில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் மாறி மாறி விருந்து திருவிழா கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வஞ்சினிபட்டி கிராமத்தில் அல்லாசாமி பூக்குழித் திருவிழா இன்று அதிகாலை நடைபெற்றது. மொஹரம் பண்டிகையை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா 350 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இத்திருவிழாவில் இக்கிராமம் முழுவதும் இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் மாறி மாறி விருந்து வைத்து கொண்டாடினர்.
இந்த திருவிழாவையொட்டி ஊா் முழுவதும் வண்ண ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பூக்குழி வளா்க்கப்பட்டு சுவாமிக்கு பாத்தியா ஒதப்பட்டது. பூக்குழியில் உள்ள சாம்பலை பிரசாதமாக அள்ளி, இந்துக்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் பூசி விடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.சுவாமி புறப்பாடு நடைபெற்று ஊா் முழுவதும் கிராம மக்களோடு வலம் வந்தனா். பூக்குழியை 3 முறை சுற்றி வந்த பக்தா்கள் சட்டை அணியாமல் பூக்குழிக்குள் இறங்கி நெருப்பை இரு கைகளால் அள்ளி வாரி இறைத்தனா். அதன்பிறகு மண்வெட்டியால் நெருப்பை அள்ளி பெண்களுக்கு வழங்க அதை தங்களது முந்தானையில் பெண்கள் வாங்கிச் நெஞ்சில் வைத்து பின்பு கீழே கொட்டும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. நேத்திக்கடனாக, குழந்தை வரம், திருமணம் வேண்டியும் பெண்கள் இந்த நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது கூடியிருந்த பெண்கள், ஆண்கள் குலவையிட்டு வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சி இந்து முஸ்லீம் ஒற்றுமையை பறை சாற்றும் ஓர் முக்கிய விழாவாக பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் இங்கு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தென்மாவட்டங்களில் இன்றும் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து பல்வேறு கோயில் திருவிழாக்களை நடத்தி வருவதும், சாதி, மதங்களைக் கடந்து அன்புடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வருவதற்கும் இது போன்ற விழாக்களே எடுத்துக்காட்டாகும்.