Chennai Murder | மனைவி பாலியல் வன்கொடுமை! தடுத்த கணவர், குழந்தை கொலை! சென்னையில் பகீர் சம்பவம்!
பீகாரை சேர்ந்த இளைஞர் சென்னையில் சாக்கு மூட்டை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த போது தடுத்த கணவரையும், 2 வயது குழந்தை என ஒட்டுமொத்த குடும்பத்தையும் கும்பல் ஒன்று கொடூரமாக கொலை செய்துள்ளது வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.
சென்னை அடையார் இருசக்கர வாகன ஷோரூம் பக்கத்தில் ஜனவரி 26ம் தேதி சாக்கு மூட்டை ஒன்று இருந்தது. அதில் ரத்தக்கறை இருப்பதை பார்த்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாக்கு மூட்டையை பிரித்த போது அதில் இளைஞர் ஒருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது 2 பேர் சாக்கு மூட்டையை கொண்டு வந்து வீசி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
கொலை செய்யப்பட்டவரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அது ஒரு தனியார் செக்யூரிட்டி அலுவலகம் என்பது தெரியவந்தது. அங்கு சென்று விசாரித்த போது தான் கொலை செய்யப்பட்டவர் பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் என்பதை கண்டுபிடித்தனர். அவர் இங்கு வந்து வேலை கேட்டதாகவும், அப்போது வேலை இல்லாததால் பிறகு சொல்கிறோம் என சொல்லி செல்போன் எண்ணை கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்த செல்போன் எண் தான் கவுரவ் குமாரின் பாக்கெட்டில் இருந்ததுள்ளது.
அடுத்தடுத்த விசாரணையில் கவுரவ்குமார் தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்து தன் மனைவியுடன் அங்கேயே தங்கியிருந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இந்த கொலை தொடர்பாக 3 வட மாநில நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் 9 பேரிடம் அடையாறு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கவுரவ் குமார் மட்டுமல்லாமல் அவரது மனைவியையும், 2 வயது குழந்தையையும் சேர்த்து கொலை செய்ததை குற்றவாளிகள் ஒப்புக் கொண்டது அதிர வைத்தது.
மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த போது தடுத்த கணவர் கவுரவ் குமாரையும், குழந்தையையும் அந்த போதை கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் சடலத்தை மத்திய கைலாஷ் ஆற்றங்கரையோரம் போலீசார் மீட்டனர். மனைவியும் சடலத்தை பெருங்குடி குப்பை கிடங்கில் தேடும் பணி நடந்து வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் இன்னும் எத்தனை பேர் சம்பந்தப்பட்டுள்ளார்கள், சம்பவம் நடந்த இடம் என்ன தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளி பணிக்கு வந்த பீகார் இளைஞர் குடும்பத்தோடு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















