(Source: ECI/ABP News/ABP Majha)
Food Story: நண்டு ஆம்லெட்..விரால் மீன் குழம்பு..சுண்டி இழுக்கும் சுவை! திருச்சி 'கார்த்திக் மெஸ்' Trichy | Food
திருச்சியில் மக்கள் மனதில் மட்டுமன்றி, உணவுப் பிரியர்கள் அனைவர் மனதிலும் இடம்பெற்ற உணவகம் கார்த்திக் மெஸ்.
இந்த உணவகத்தில் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை மட்டுமே சாப்பாடு கிடைக்கும். திருச்சி கன்டோன்மெண்ட் வில்லியம்ஸ் சாலையில் உள்ள ’கார்த்திக் மெஸ்’க்கு அருகில் செல்லும் போதே வாசனை சுண்டி இழுத்தது. குறிப்பாக மீன்குழம்பு வாசனை காற்றோடு கலந்து மூக்கைத் துளைத்து நம்மை வரவேற்றது.
இங்கே கூட்டம் எப்போதும் அலைமோதிக்கொண்டே இருக்கும். காரில் வருபவர்கள் காரிலும், மற்றவர்கள் வெளியேயும் சிறிது நேரம் காத்திருந்து சாப்பிட்டு விட்டுச் செல்வார்கள். அந்த அளவிற்கு அறுசுவையால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளது இந்த மெஸ். 90 ரூபாய்க்கு முழுச் சாப்பாடு, கூடவே சிக்கன், மட்டன், மீன் குழம்பு வகைகள் என வயிற்றுக்கு தரமாக சாப்பிட்டு வரலாம். இங்கு வீட்டுமுறையில் செய்யப்படும் ’விரால் மீன்குழம்பு’க்கு அடிமையாகாதவர்களே இருக்கமாட்டார்கள். வழக்கமாக எல்லா ஹோட்டல்களிலும் பணிபுரியும் ஊழியர்கள், ’மெனு’வை வரிசையாகச் சொல்ல, அதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வரச் சொல்லுவோம். இங்கு அப்படியில்லை. சாப்பாடு அல்லது பிரியாணி எது வாங்கினாலும், பிரத்யேகமாக வீட்டுமுறையில் செய்யப்படும் அசைவ வகைகள் ’மட்டன்’, ’சிக்கன்’,’ மூளை’, ’ஈரல்’, ‘தலைக்கறி’, ’மீன்’, ‘ இறால்’, ‘கோலா உருண்டை’, ‘ நண்டு’ என அனைத்து சைடு டிஷ்களையும் பெரிய டிரேயில் வைத்துக் கொண்டு வந்து காட்டுகின்றனர். பார்க்கும்போதே நமக்குச் சாப்பிடத் தோன்றும்.. நமக்குப் பிடித்ததைக் கூறினால், அடுத்த சில நிமிடங்களில் சுடச் சுட ’ஆவி’ பறக்கக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, நண்டு ஆம்லேட் இங்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது. கல்லூரியில் பேராசிரியராக இருந்து உணவக உரிமையாளர் ஆனவர் தான் சங்கர்.. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்தான் எங்க அப்பாவுக்கு சொந்த ஊரு. அப்பாவுக்கு பெல் நிறுவனத்துல வேலை கிடைச்சதனால, குடும்பத்தோடு திருச்சிக்கே வந்துட்டாங்க. நான் பொறந்தது, படிச்சது எல்லாமே திருச்சிதான். நான் ’ஹோட்டல் மேனேஜ்மென்ட்’ படிச்சி முடிசிட்டு, புதுக்கோட்டையில இருக்குற ஒரு தனியார் கல்லூரியில 15 வருசத்துக்கும் மேல பேராசிரியரா வேலை பார்த்தேன். ஆனாலும், படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி, மனசுக்குப் புடிச்ச மாதிரி ஒரு தொழில் பண்ணணும்னு நினைச்சதனால, 2002-ல உருவானதுதான் இந்த ’கார்த்திக் மெஸ்.’ ஆரம்பத்தில் குடும்பத்துல இருக்குற அஞ்சு பேர வச்சிக்கிட்டு தொடங்குன இந்த மெஸ், இப்போ 25 பேர் வரை வேலை பாக்குற அளவுக்கு ஆலமரமா மாறியிருக்கு. ஆரம்பத்துல இங்க இயங்கிக்கிட்டு இருக்குற மாதிரியான கார்த்திக் மெஸ் இல்லை, ரொம்பச் சின்னதா பத்துக்குப் பத்து சதுர அடி இடத்துலதான் மெஸ் வச்சிருந்தோம். இப்போ கடையை விரிவு செஞ்சிருக்கோம்.
நாங்க ஆரம்பிச்சதுல இருந்து இப்போ வரை தரத்துல எந்த சமரசமும் செஞ்சதே இல்லை. கே.கே நகர்ல இன்னொரு கிளை ஆரம்பிச்சிருக்கோம். சாப்பாட்டைப் பொறுத்தவரைக்கும் ’அரிசி’தாங்க ரொம்ப முக்கியம். எங்க தரமான அரிசி கிடைக்கும்னு தேடிப் பார்த்துட்டே இருப்போம். ’காங்கேயம்’, ‘வேலூர்’, ‘நாமக்கல்’னு நாங்க நல்ல தரமான அரிசியைத் தேடி உயர்ந்ததா எங்கெல்லாம் கிடைக்குதோ அங்க போய் நேரடியா பார்த்துத் தரம் பிரிச்சு எடுத்துட்டு வருவோம். பிரபல அரசியல்வாதிகள், நடிகர்கள்னு யாரு திருச்சி வந்தாலும் நம்ம கடைச் சாப்பாடு சாப்பிடாம இருக்கவே மாட்டாங்க. நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்திலிருந்தும், எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சர் ஆன பிறகும் திருச்சி வந்தா நம்ம கடைச் சாப்பாட்டைச் சாப்பிடாமப் போகமாட்டார்.
விரால் மீன்குழம்பு’ன்னா அவருக்கு ரொம்பப் பிடிக்கும். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நம்ம கடையோட ’வஞ்சிர மீன்’ ரொம்பப் பிடிக்கும். முக்கியப் புள்ளிகள், திருச்சிக்கு விசிட் அடிச்சாலும் முதல் நாளே கட்சிக்காரர்கள் முதல் புட்சேப்ட்டி ஆபீஸர் வரை எங்க கடையில சொல்லி வச்சி சாப்பாடு எடுத்துப்போவாங்க.. மட்டன்னா இன்னும் ஒரு 50 ரூபாய் அதிகம். முழுச் சாப்பாடு 90 ரூபாய்க்குக் கொடுக்குறோம். கிடைக்கும்போது ஸ்பெஷலா புறா, பண்ணை முயல் கறியும் விற்பனை பண்றோம். முழுச் சாப்பாடுக்குக் கொடுக்குற அசைவக் குழம்புல ஒண்ணு, ரெண்டு பீஸ் போட்டுதான் கொடுப்போம்.
அயிரை, விறால்னு என்ன மீன் கிடைக்குதோ அதைக் குழம்பு வைப்போம். 4 மணிக்குள்ள அத்தனையும் காலியாகிடும்” எனச் சொல்லி முடித்தார். அப்புறம் இங்கே செய்ற இறால் சுவை இருக்கு பாருங்க, அத சாப்பிட்டு எங்க போய் இறால் சாப்பிட்டாலும் நமக்கு அது பிடிக்காது. நான் சாப்பிட்டதுலயே ரொம்ப பெஸ்ட்ன்னா அது விறால் மீன் குழம்புதான். முக்கியமா நண்டு ஆம்ப்லேட்... ஒண்ணு, நமக்கு நண்டு சாப்பிடத் தெரியாது, இல்லனா வெளில சாப்பிட கூச்சப்படுவோம். ஆனா அந்தக் கவலை இல்லாம நண்டு சாப்பிட இங்க வரலாம். எனச் சொல்ல, அவரின் பேச்சிலேயே அதன் சுவையை உணர முடிந்தது.