படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ/மாணவியர்கள் பிரதம மந்திரி யாசஸ்வி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் : பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ/மாணவியர்கள் பிரதம மந்திரி யாசஸ்வி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார்.
ஓபிசி மற்றும் பிறருக்கான துடிப்பான இந்தியாவுக்கான PM யங் அசீவர்ஸ் ஸ்காலர்ஷிப் விருது திட்டம் (PM -யசஸ்வி) இது ஓபிசி, ஈபிசி மற்றும் டிஎன்டி மாணவர்களுக்காக தற்போதுள்ள உதவித்தொகை திட்டங்கள் மற்றும் விடுதித் திட்டம் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு குடைத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் ஐந்து துணைத் திட்டங்கள் உள்ளன.
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ/மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Scholarship) திட்டம் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினர் மாணவ/மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தகுதிகள் :
இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை, பாலிடெக்னிக், போன்ற பிற படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
2025-26-ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, மாணவ/மாணவியருக்கு கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள UMIS (University Management Information System) எண் மூலம் https://umis.tn.gov.in/என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
மாணாக்கர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Institution Nodal Officer) அணுகி https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய தேதி:
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மாணவர்களின் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள்: 31.12.2025 என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. கல்வி உதவித் தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.





















