Kamal thank MK Stalin : ”நான் சொன்ன வார்த்தைக்காக.. கண்கலங்கிய முதல்வர்” நெகிழ்ச்சியில் கலங்கிய கமல்
அமரன் படத்தை பார்த்து கண்கலங்கிவிட்டேன் என உருக்கமாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான அமரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிப்பில் உருவான இந்தப் படத்தை முதலமைச்சர் ஸ்டாலிம், துணை முதலமைச்சர் உதயநிதியும் படக்குழுவினருடன் சேர்ந்து பார்த்தனர். பின்னர் படத்தை தயாரித்த கமல்ஹாசனை போனில் தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் படம் அருமையாக இருந்ததாகவும், கண்கலங்கி விட்டதாகவும் பேசினார். இதனை தொடர்ந்து படம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஸ்டாலின், ‘நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அன்பு அழைப்பை ஏற்று, நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன். புத்தகங்களைப் போல் - திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது! தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமார், மேஜர் முகுந்த் வரதராஜன் - திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய்பல்லவி மற்றும் அம்ரன் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்! நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும் - நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் Big Salute” என்று வாழ்த்தினார்.
இந்தநிலையில் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். அதில், எங்களது அழைப்பை ஏற்று #Amaran திரைப்படத்தைப் பார்த்து ரசித்ததோடு, படத்தையும், அதில் பங்களிப்பாற்றிய கலைஞர்களையும் மனதார பாராட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், என் அன்பிற்கினிய நண்பர் ஸ்டாலினுக்கும், தமிழ்நாட்டின் துணை முதல்வர், என் அன்பு இளவல் உதயநிதிக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. முதல்வரின் பாராட்டு அமரனின் பெரும் வெற்றிக்கு அறிகுறி” என்று கூறியுள்ளார்.