(Source: ECI/ABP News/ABP Majha)
Delhi Ganesh | IND-PAK போரால் சினிமா ENTRY! விமானப்படையில் 10 ஆண்டுகள்! டெல்லி கணேஷ்-ன் சுவாரஸ்ய கதை
இந்தியா- பாகிஸ்தான் போர் தான் டெல்லி கணேஷின் சினிமா வாழ்க்கைக்கான ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறது. இதற்காக விமானப்படை வேலையையே உதறித் தள்ளிவிட்டு வந்துள்ளார் டெல்லி கணேஷ்.
1944ல் திருநெல்வேலி அருகே வல்லநாட்டில் பிறந்த கணேசனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சினிமாவுடன் எந்த தொடர்பும் இல்லை. படிப்பில் கெட்டிக்காரராக இருந்த டெல்லி கணேசனுக்கு 1964ல் இந்திய விமானப் படையில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு வருட பயிற்சிக்கு பிறகு டெல்லி சென்று விமானப்படையில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு அலுவலகம் சம்பந்தமாக வேலைதான். இருந்தாலும் விமானப்படை வீரர்களுக்கான துப்பாக்கி பயிற்சியும் அளிக்கப்பட்டதால், துப்பாக்கியை கையாள்வதிலும் மாஸ்டராக இருந்துள்ளார்.
அவர் விமானப்படையில் சேர்ந்த நேரத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் போர் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது . அப்போது காஷ்மீரில் போரில் காயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக டெல்லி அழைத்து வரப்பட்டனர். அப்போது தொலைக்காட்சி இல்லாததால் ரேடியோ மட்டுமே அவர்களுக்கான பொழுதுபோக்காக இருந்துள்ளது. சிகிச்சை பெற்று வரும் ஜவான்களை உற்சாகத்துப்படுத்துவதற்காக ராணுவம், கப்பற்படை, விமானப்படை சேர்ந்து ஒரு முடிவை எடுத்தனர். இவர்களே பொழுதுபோக்குக்காக நாடகம் நடத்தலாம் என்ற முடிவுதான் அது. அப்போது நாடகத்தில் நடிப்பதற்கு அவர்கள் தேர்வு செய்த நபர் தான் டெல்லி கணேஷ்.
ஆரம்பத்தில் தயங்கிய டெல்லி கணேஷ் 20 நிமிடங்கள் நடித்து முடித்ததும், நகைச்சுவையான நடிப்பை பார்த்த அனைவரும் அவரது fan ஆகியுள்ளனர். உனக்கு நிறைய திறமை இருக்கு, நடிப்பை மட்டும் விட்டுறாத என அவர்கள் அன்று சொல்லிய வார்த்தை டெல்லி கணேசை இத்தனை ஆண்டுகளாக ஓட வைத்துள்ளது. நாட்கள் போக போக விமானப் படையில் வேலை பார்க்கும் ஆர்வம் அவருக்கு குறைய ஆரம்பித்தது. நாட்டுக்காக உழைத்து விட்டோம், இனி வீட்டுக்காக உழைப்போம் என முடிவெடுத்து 1974ல் விமானப் படை வேலையில் இருந்து விலகினார் டெல்லி கணேஷ்.
அதன்பின்னர் தர்ஷன பாரத நாடக சபா என்கிற டெல்லி நாடக குரூப்பில் சேர்ந்து அவர் நடித்த நாடகங்கள் திரைத்துறைக்குள் அவரை கொண்டு வந்தது. இயல்பான, நகைச்சுவையான டாப்பில் இருந்த இயக்குநர்களின் கவனம் டெல்லி கணேஷ் பக்கம் திரும்பியது.
அப்படிதான் 1977ல் பட்டின பிரவேசம் படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார் டெல்லி கணேஷ். இவரை தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குநர் கே.பாலசந்தர். அதுவரை கணேசனாக இருந்தவர் டெல்லி கணேஷ் என்ற அடையாளமாக மாறியதற்கும் பாலசந்தர் தான் காரணம். சினிமாவுக்கு ஏற்ற மாதிரி பெயரை மாற்றிக் கொள் என பாலசந்தர் சொல்லியுள்ளார். உடனே தனது சொந்த ஊரை வைத்து நெல்லை கணேசன் என வைத்துக் கொள்ளவா என கேட்டுள்ளார். இது ஏதோ அரசியல்வாதி பெயர் மாதிரி இருக்கிறது என நக்கல் செய்துள்ளார் பாலசந்தர். கடைசியில், நீ டெல்லியில் பல நாடகங்களில் நடித்திருப்பதால் உன் பெயரை டெல்லி கணேஷ் என்று வைத்துகொள் என கூறியுள்ளார் பாலசந்தர். அன்றைய காலகட்டத்தில் பாலசந்தர் அறிமுகம் செய்து வைத்த நடிகர் என்றாலே தனிப்பெருமை. அது டெல்லி கணேஷுக்கு கூடுதல் ப்ளஸாக அமைந்தது.
அன்று தொடங்கி மொத்தமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 400க்கும் அதிகமான படங்களில் நடித்து அசத்தியுள்ளார் டெல்லி கணேஷ். மூத்த கலைஞராக அடுத்தடுத்த தலைமுறை நடிகர்களுடனும் இணக்கமாக செயல்பட்டு நகைச்சுவையான நடிப்பால் மக்கள் மனங்களை வென்றவர். அவரது மறைவு தமிழ் திரைத்துறைக்கு பேரிழப்பு.