Thirumavalavan meets MK Stalin : ஸ்டாலின் திருமா மீட்டிங்! முடிவுக்கு வருமா சர்ச்சை? பின்னணி என்ன?
விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்தது, ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என பேசியது என திமுக விசிக கூட்டணியை சுற்றி விமர்சனங்கள் வலம் வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்.
விசிக சார்பில் மதுஒழிப்பு மாநாடு வருகிற அக்டோபர் 2ஆம் தேதி நடைப்பெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு திருமாவளவன் அழைப்பு திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் விசிக அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக நெருக்கம் காட்டுகிறதா என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் திமுக கூட்டணியில் இருந்து கொண்டே மது ஒழிப்பு மாநாடு நடத்த இருப்பதும், அதிமுகவுக்கு அழைப்பு விடுத்ததும் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோ என்று பதிலடி கொடுத்தார் விசிக தலைவர் திருமாவளவன்.
இந்த பரபரப்புக்கு நடுவே ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என திருமா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு டெலிட் செய்யப்பட்டது. பிறகு மீண்டும் பதிவிடப்பட்டு அதுவும் டெலிட் செய்யப்ப்பட்டது. இதுகுறித்து திருமாவளவனிடம் கேட்ட போது தனக்கு தெரியாது என்றும், அட்மினிடம் தான் கேட்க வேண்டும் என்றும் பதில் கொடுத்தார். பிறகு அந்த முழு வீடியோவும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனால் கூட்டணிக்குள் என்ன நடக்கிறது என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினிடம் மதுஒழிப்பு மாநாடு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அது திருமாவளவன் தெளிவாக சொல்லிவிட்டார். நான் சொல்லவேண்டிய அவசியமில்லை. இதனை அரசியலோடு முடிச்சு போட வேண்டாம் என்றார்.
இந்த பிரச்னைகளுக்கு மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலினை திருமாவளவன் தலைமை செயலகத்தில் சந்திக்கிறார். அமெரிக்க பயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவிப்பதற்காகவும், முதலீடுகள் தொடர்பாக பேசுவதற்காகவும் சந்திக்கவிருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இருப்பினும் நடந்து கொண்டிருக்கும் பிரச்னை தொடர்பாகவும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்போடு கூட்டணி விவகாரம் முடிவுக்கு வருமா அல்லது இந்த சந்திப்பில் திருமா அமைச்சரவை தொடர்பாக ஏதேனும் கோரிக்கைகள் வைக்கவிருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.