MK Stalin : ’’எடுபடாத கோயில் அரசியல்! தவிடுபொடியான அதிமுக’’வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
மக்களின் ஆன்மீக நம்பிக்கைகளை அரசியல் சுயலாபத்துக்குப் பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளை, கோயில் கட்டிய மண்ணிலேயே இறைநம்பிக்கையுள்ள வாக்காளர்கள்
வீழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்
நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது!
2022-ஆம் ஆண்டு விருதுநகரிலே நடைபெற்ற முப்பெரும் விழாவிலே நான் உரையாற்றும்போது,நமதே.. நாடும் நமதே’ என்ற முழக்கத்தை முதன் முதலில் முன்வைத்தேன். அது முழக்கமாக மட்டும் இருந்து விடக்கூடாது, முழுமையான வெற்றியாக விளைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை பூத் வாரியாக மேற்கொண்டது தி.மு.கழகம்.
இந்தியா கூட்டணியின் நம்பிக்கை மிக்க களமாகத் தமிழ்நாடு அமைந்தது.
மதவாதத்தையும் வெறுப்பரசியலையும் விதைக்க நினைப்பவர்கள் தமிழ்நாட்டில் எப்படியாவது கால் ஊன்றி விடவேண்டும் எனத் திட்டமிட்டார்கள். வன்ம விதைகளைத் தூவினார்கள். வதந்தி நீர் ஊற்றி அதனை வளர்க்கப் பார்த்தார்கள். நாட்டின் பிரதமர் 8 முறை தமிழ்நாட்டுக்கு வந்தார். தி.மு.கழகம் மீது அவதூறு சேற்றினை அள்ளி வீசினார். தோழமைக் கட்சிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்தார். அவர் வழியிலேயே அவரது கட்சியினரும் செயல்பட்டனர்.
மற்றொருபுறம், இந்த மதவாத சக்திகளுக்கு அடிமைச் சேவகம் செய்த அ.தி.மு.க. தனித்து நிற்பதாகக் கூறி மறைமுகக் கூட்டணியாகச் செயல்பட்டது. இந்த இரண்டு சக்திகளும் தமிழ்நாட்டுக்கு எந்தளவு ஆபத்தானவை, எந்த அளவுக்குக் கேடானவை என்பதைக் கொள்கைத் தெளிவுடன் எடுத்துரைப்பது மட்டுமே தேர்தல் களத்தில் எனது பரப்புரை வியூகமாக அமைந்தது.
நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலான நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி, இந்திய அரசியலின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒன்றிய ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத்தான் தனிப்பெரும்பான்மை பெற முடியாத பா.ஜ.க.வின் சரிவு காட்டுகிறது. அவர்களின் கோட்டை என நினைத்திருந்த மாநிலங்களில் இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் சரிக்குச் சரியாக இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் இடம்பெறவிருப்பது
சர்வாதிகாரத்தனமான ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்களின் ஆன்மீக நம்பிக்கைகளை அரசியல் சுயலாபத்துக்குப் பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளை, கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் இறைநம்பிக்கையுள்ள வாக்காளர்கள். சிறுபான்மை மக்களின் நெஞ்சில் இருந்த அச்ச உணர்வு நீங்கியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் நமது கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் நம்பிக்கைத் துளிர்கள் அரும்பியுள்ளன. அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில், நாட்டை வழிநடத்தும் பணியை இந்தியா கூட்டணி மேற்கொள்ளும். அதற்கு நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றி பெருந்துணையாக இருக்கும்.
வெற்றியை வழங்கிய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை கரம் குவித்து நன்றியை உரித்தாக்குகிறேன்.