Edappadi Palanisami : பத்து முறை தோல்வி! வெற்றிக்கு திண்டாடும் EPS தத்தளிக்கும் அதிமுக
மக்களவை தேர்தலில் பல இடங்களில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அடுத்தடுத்து, அடி சறுக்குவதால் அதிமுக நிர்வாகிகள் மத்தியிலேயே பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
அதிமுகவின் தனிப்பெரும் தலைவராக தன்னை ஆக்கிக்கொள்வதற்காக உட்கட்சியில் அவர் எடுத்த அரசியல் முயற்சிகளில் பாதியை கூட கள அரசியலில், தேர்தலில் அரசியல் செயல்பாட்டில் எடப்பாடி பழனிசாமி காட்டவில்லை என அதிமுக தொண்டர்கள் மத்தியில் புகைச்சல் எழுந்திருக்கிறது. இபிஎஸ் தலைமையில் அதிமுக சந்தித்த 10 தேர்தலில்களிலும் தோல்வியே அவருக்கு பரிசாக கிடைத்துள்ளது. எத்தனை கூட்டங்கள் போட்டாலும், எத்தனை முறை எச்சரிக்கை விடுத்தாலும் அவரது ஆணையை கட்சி நிர்வாகிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளாததும், ஜெயலலிதா, சசிகலா, டிடிவி தினகரன் போன்று இபிஎஸ் மீது நிர்வாகிகளுக்கு பயம் இல்லாததும் இப்படியான தோல்விக்கு காரணம் என அதிமுக தொண்டர்கள் புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி சந்தித்த தோல்விகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
1. ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் அந்த கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால், மதுசூதனனுக்கு தோல்வியே மிஞ்சியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் டிடிவி தினகரன் பெருவாரியான வெற்றியை பெற்றார்.
2. அதிமுகவில் இருந்து தினகரன் அணிக்கு சென்ற அதிமுக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வைத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்த தொகுதிகள் உள்ளிட்ட 22 சட்ட சபை தொகுதிகளுக்கு அதிமுக ஆட்சி கால கட்டத்தில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த நேரத்திலேயே தேர்தல் நடைபெற்றது. அதில், எதிர்க்கட்சியாக இருந்த திமுக 13 தொகுதிகளில் வென்ற நிலையில், ஆளுங்கட்சியான அதிமுக 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்து.
3. அதே நேரத்தில் நடைபெற்ற 2019 மக்களை தேர்தலில் கூட ஓபிஎஸ் மகனான ரவீந்திரநாத் மட்டுமே அதிமுக சார்பில் தேனியில் வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியாக அதிமுக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
4. அதே ஆண்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.
5. பின்னர், 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்த அதிமுக, திமுகவிடம் தோல்வியுற்று 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை பறிகொடுத்தது.
6. சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பெரிய அளவில் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை
7. திமுக ஆட்சியில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வி அடைந்தது.
8. ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு 2022ஆம் ஆண்டில் கட்சியின் பொதுச்செயலாளராகவே ஆகி, தனிப்பெரும் தலைவராக உருவெடுத்த எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை நிறுத்தினார். ஆனால், 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி நிறுத்திய வேட்பாளர் தோல்வி அடைந்தார்.
9. 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை.
10. நாடாளுமன்ற தேர்தலோடு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத் தேர்தலிலும் அதிமுக வேட்பாளர் ராணி வெறும் 5 ஆயிரத்து 267 வாக்குகள் மட்டுமே பெற்று 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இப்படி எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த தேர்தல்களில் தொடர்ந்து அதிமுக தோல்வியுற்று வருவதால், அவரது தலைமை மீது நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிருப்தியடைந்திருப்பதாக கூறப்படுகிறது.