Bihar Road: நட்ட நடுரோட்ல குத்தவெச்ச மரங்கள்.. எப்புட்றா வண்டி ஓட்றது? பாலத்திற்கே சவால் விடுக்கும் சாலை
Bihar Road: பீகாரில் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலையின் நடுவே ஆங்காங்கே, மரங்கள் இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bihar Road: விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையின் நடுவே ஆங்காங்கே, மரங்கள் இருப்பது ஆபத்தான பயணத்திற்கு வழிவகுப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ரூ.100 கோடி செலவில் சாலை:
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 90 டிகிரியில் கட்டப்பட்ட மேம்பாலம், தேசிய அளவில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. உயிருக்கே ஆபத்தான அந்த பாலத்தில் பயணிக்கவே முடியாது என பொதுமக்கள் கூறினாலும், அதெல்லாம் பயணிக்க முடியும் என அதிகாரிகள் விளக்கமளித்தனர். ஆனாலும், இறுதியில் கட்டுமான பணியில் தொடர்புடைய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அரசு ஒப்பந்தங்களை எடுப்பதில் இருந்து 2 நிறுவனங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தான், அதற்கு சற்றும் சளைக்காத விதமாக, பீகாரில் 100 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையின் நடுவே ஆங்காங்கே மரங்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
जहानाबाद शहर से 1-2 किमी की दूरी पर इरकी के पास इस तरह से सड़क बनाया गया है,पिछले पांच-छह महीनों में कई एक्सीडेंट हो चुके हैं लेकिन प्रशासन-सरकार किसी को इसकी जानकारी नहीं है,बाहर में जिला का थू-थू करवा रखें हैं ये लोग!@DM_Jehanabad @RCD_Bihar @NitinNabin pic.twitter.com/HSNrqPrVL0
— SOURAV RAJ (@souravreporter2) June 29, 2025
நட்டநடுவே குத்தவெச்ச மரங்கள்..
சாலை அமைக்கும் பணிகளின்போது, சாலையோரமாக இருக்கும் வாகனங்கள் மற்றும் அடிகுழாய் ஆகியவற்றை கூட அகற்றாமல், அதன் மேலேயே தார் ஜல்லியை கொட்டிச் செல்வதை நமது ஊரிலேயே அடிக்கடி பார்க்க முடிகிறது. அதன் அப்கிரேடட் வெர்ஷனாக, பீகாரின் ஜெகனாபாத் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாட்னா-கயா பிரதான சாலையின் 7.48 கிலோமீட்டர் நீளத்தின் நடுவில் பல முதிர்ந்த மரங்கள் குறுக்கும் நெடுக்குமாக அமைந்துள்ளன. இதன் காரணமாக அந்த சாலை விரிவாக்கத் திட்டம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் குறித்த விமர்சனங்களைத் தூண்டிவிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் பணி திறன் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
ரூ.100 கோடி கோவிந்தாவா?
பாட்னாவிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த திட்டம், ரூ.100 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி மற்றும் இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சாலை முழுவதும் ஆங்கேங்கே இருகும் முற்றிலும் வளர்ந்த மரங்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி, விபத்து அபாயத்தை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம் அந்த மரங்களில் வாகன விளக்குகளை பிரதிபலிக்கக் கூடிய ரிஃப்ளெக்டர்களோ, மரங்கள் இருப்பதை அறியச் செய்யும் வகையில் கருப்பு மற்றும் வெள்ளை நிற வண்ணம் கூட தீட்டப்படவில்லை. மரங்கள் நேர்க்கோட்டில் கூட இன்றி, வளைந்து நெளிந்து சாலையின் பல்வேறு பகுதிகளில் இருப்பது மிகுந்த ஆபத்தாக கருதப்படுகிறது.
இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், பணிகள் முடிந்த சாலையில் இவ்வளவு மரங்கள் எப்படி அப்படியே விடப்பட்டன என்பது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்த வினோதமான கட்டுமானத்தால் கோபமடைந்த ஒரு பயனர், "திட்டமிடல் இல்லை. பொது அறிவு இல்லை. வரி செலுத்துவோர் பணம் வீணடிக்கப்படும் மற்றொரு அத்தியாயம் இது" என்று சமூக வலைதளத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
மரங்கள் அகற்றப்படாதது ஏன்?
திட்டமிடல் கட்டத்தில், சாலை அமைப்பதற்கு இடையூறாக இருந்த மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம், வனத்துறையிடம் அனுமதி கோரியுள்ளது. ஆனால் அதனை நிராகரித்த வனத்துறை, சாலை அமைக்க பயன்படுத்திய 14 ஹெக்டேர் வன நிலத்திற்கு இழப்பீடு கோரியுள்ளது. இந்த நிபந்தனையை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்த நிர்வாகம், திட்டத்தை தாமதப்படுத்துவதற்குப் பதிலாக இருக்கும் மரங்களைச் சுற்றி சாலை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பீகார் சாலை கட்டுமானத் துறையோ அல்லது உள்ளூர் மாவட்ட நிர்வாகமோ அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. இந்த பீகார் மாநிலத்திற்கு தான், நாட்டின் மற்ற எந்த மாநிலத்தை காட்டிலும் அதிகப்படியான உட்கட்டமைப்பு திட்டங்கள், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளன.





















