Thanjavur Tourism: சோழர்கால சிற்பிகளின் உளி சிறப்பு நர்த்தனமாடிய சிற்பங்களின் சரணாலயம் தாராசுரம்
மோனோலிசா படத்தின் பெருமை இணையாக உள்ளதாக வெளிநாட்டு பயணிகளால் கூறப்படுகிறது இக்கோயிலில் உள்ள அன்னபூரணி சிற்பம்.
தஞ்சாவூர்: மாபெரும் திறமைசாலிகளால் உருவான தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் சிற்பங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பெருமை கொண்டது.
மாமன்னன் இரண்டாம் ராஜராஜ சோழனால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மிகப் பெரும் பழமை வாய்ந்த கோயில்தான் தஞ்சை மாவட்டம் தாராசுரத்தில் அமைந்துள்ள ஐராவதீஸ்வரர் கோவில். இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் சொல்லும் நம் சோழர்கால சிற்பிகளின் பெருமையை. ஆயிரக்கணக்கான சிற்பங்களை குவியல் குவியல்களாக கொட்டி வைத்திருக்கிறார்கள். பார்க்க பார்க்க பரவசப்படுத்தும். சோழர் கால சிற்பிகளின் உளிகள் கல்லில் ஆடியுள்ள நர்த்தனத்தை கண்டு நம் கண்கள் வியப்படையும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்... அதுபோல் அமைந்துள்ள இந்த சிற்பம். யானையின் மத்தகத்தில் ஒரு காலை வைத்து நிற்கும் ஈஸ்வரன் சூலத்தை தலைகீழாக வைத்து யானையை வதம் செய்கிறார். உரிக்கப்பட்ட தோல்களே இச்சிற்பத்திற்கு திருவாட்சியாக அமைகிறது. ஈஸ்வரனின் உக்கிரமான பார்வையைப் பார்த்து பயந்த கோலத்தில் ஒடுங்கி நிற்கிறாள் பார்வதி. யானையின் கால்கள் கீழே இரண்டும், மேலே இரண்டுமாக தொங்குகின்றன.
கஜசம்காரமூர்த்தி எனும் இச்சிலையை “கரிஉரித்த சிவன்” என்று தேவார பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாராசுரக்கோவில் எங்கோ ஒரு மூலையில் கிடந்த இச்சிற்பத்தை தற்போது தஞ்சை அருங்காட்சியத்தில் பாதுகாத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரத மண்டபத் தூண்களில் மகாபாரதம், ராமாயணம் மற்றும் சிவபுராணம், பரத நாட்டிய கர்ணங்கள், ரதி மன்மதன் கதைகள் என்று எண்ணிலடங்கா கதைகளைச் சொல்லும் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தூண்களின் நான்கு பட்டைகளிலும் சிற்றோவியங்கள்போல் ஆயிரக்கணக்கான புடைப்புச் சிற்பங்கள்.
கோவிலின் நுழைவாயினுள் செல்வதற்கு முன்பே பலிபீடத்திற்கு ஏறும் ஏழு கருங்கற்படிகளை, ஏழு சுர படிகளாக அதாவது சரிகமபதநி என்கிற வகையில் வடிவமைத்துள்ளனர். கீழ்வாயிலுள் நுழைந்தால் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கொடிமரம். கோவிலின் கூம்பிய விமானத் தோற்றம், அதற்குக் கீழ் உள்ள மண்டமும், இரு புறமும் யானைகளும், குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைக்கப்பட்ட இக்கோவிலை சிற்பக்கலையின் சிகரம் என்றே சொல்லலாம்.
மோனோலிசா படத்தின் பெருமை இணையாக உள்ளதாக வெளிநாட்டு பயணிகளால் கூறப்படுகிறது இக்கோயிலில் உள்ள அன்னபூரணி சிற்பம். புன் முறுவல் சிரிப்போடு திகழும் இச்சிற்பம் வெளிநாட்டு பயணிகளை கவர்ந்து இழுக்கிறது. இது மட்டும் இல்லைங்க... இன்னும், இன்னும் என்று கோவிலை ஒரு சுற்று சுற்றி வந்தால் அதிபத்தர், அமர்நீதியார், இயற்பகையார், இசைஞானியார், எறிபத்தர், ஏனாதிநாயனார், கண்ணப்பர், கழற்சிங்கர் போன்ற 63 நாயன்மார்களின் புடைப்புச் சிற்பங்களை பார்த்துவிடலாம். வேறு எந்த கோவிலிலும் இதுபோல் 63 நாயன்மார்களின் புடைப்பு கற்சிற்பங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சை அரண்மனைக்குச் சொந்தமான இக்கோவிலை தொல்பொருள் துறையினர் இதன் பழமையை மாறாமல் பாதுகாத்து வருகின்றனர். இக்கோயிலும் யுனஸ்கோவால் பாதுகாப்படவேண்டிய பாரம்பரிய மரபு அடையாளச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்து சிற்பங்களை கண்டு வியந்து செல்கின்றனர்.
கல்வெட்டுக்கள், நாட்டிய கர்ணமுத்திரைகள், ராமாயண மகாபாரத காவியங்கள் மற்றும் சிவபுராணக் கதைகள் போன்ற 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிற்பங்களை கொண்டுள்ள இக்கோயிலை சிற்பங்களின் சரணாலயம் என்று கூறினாலும் மிகையில்லை.