மேலும் அறிய
Advertisement
மதுரை சுற்றுலா ஸ்பாட் அரிட்டாபட்டி....கொஞ்சம் ஜில் பண்ணலாம் வாங்க..!
கிராம மக்கள் பலரும் தற்சார்பு வாழ்க்கைய தான் கடை பிடிக்கிறாங்க. பெரிய நோய்களுக்கும் கிராமத்தில் கிடைக்கும் மூலிகைய பறித்து மருந்து வச்சுக்குவாங்க.
கிராமத்த சுத்தி ஏழு மலை இருக்கு. அதனாலதான் என்னவோ இயற்கை எழில் கொஞ்சுது. அரிய வகை பறவைகள் நடமாட்டம் இருக்கும் கிராமம் தான் அரிட்டாபட்டி. சுற்றுச்சூழல் எந்த அளவுக்கு தூய்மையா இருக்குனு இதனால கணிக்க முடியும். ஊர சுத்தி விவசாயம். வாழை, கரும்பு, கத்திரி, வெண்டி, கருணைனு பலதரப்பட்ட விவசாயம் நடக்குது. மலை உச்சில இருந்து பார்த்தா கோழி கொண்ட பூவு கலர் கண்ண பறிக்கும். பச்ச பசேல்னு தெரியுற பச்ச நெல்லு தோகை நெஞ்சையும் குளு, குளுக்க வைக்கும். வடக்குப்புறமா, அழகர்கோயில் சாலை வழியா வந்தா சின்னையன் கோயில் மண் குதிரை கிராமத்து பாரம்பரியத்த சொல்லும். "பொட்டல காத்தவரு சின்னையன், பொடவ காத்தவரு பெரியையன்" சொலவடையோட சாமிய வேண்டிக்குவாங்க.
மதுரை மேலூர் அருகே உள்ளது அரிட்டாபட்டி எனும் அழகிய கிராமம். ’ வாழும் மூதூர்’ என மதுரையை பெருமையாக பேசவைப்பதற்கு அரிட்டாபட்டியும் ஒன்று. சிதைந்து போகத மொழியும், கிராமமும், சுவையான தண்ணீரும், மண்வாசனையும், குன்றும் என பெருமையோடு நிமிர்ந்து நிற்கிறது. சமணர்கால குகைகள், சமணப்படுகைகள், மகா வீரர் புடைப்புச் சிற்பம் என தற்போது பாரம்பரிய சின்னங்களை கோழிக் குச்சுகளை தாய் பாதுகாப்பது போல இளஞ்சூட்டில் பாதுகாக்கிறது அரிட்டாபட்டி. இந்த கிராமம் மதுரையில் பலருக்கும் அறியப்படதா சுற்றுலாவக தான் இருக்கிறது.
தர்ம குளம்
வெயில் காலத்திலும் குறையாம தண்ணி கொடுக்கும் குளம் தான் அரிட்டாபட்டி தர்மகுளம். இந்த குளத்தில் திருமணமான தம்பதிகள், கல்யாணம் நடந்த மறுநாள் தண்ணீர் எடுத்து சமைத்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்று நம்பிக்கையும் இருக்கு. இந்த குளத்தை பற்றி அரிட்டாபட்டி திருவிழாவில் பெருமையா பாடுவாங்க. "வள்ளாலபட்டி வளவுக்கு ஒரு மந்தை , தெற்கு தெரு தெருவிற்கு ஒரு மந்தை , அரிட்டாபட்டிக்கு அழகான தர்ம குளம்" என்று தங்கள் தவிப்பை போக்கும் குளத்தை கும்மியடித்து பாடுவாங்க. அரிட்டாபட்டி மலை முழுதும் நூற்றுக்கணக்கான சுனைகள் இருக்கு. இதனால தான் பறவைகளும், மான், முயல் என்று சின்ன விலங்களும் இங்க வசிக்குது.
லகுலீசர்
பாண்டியர்கால குடைவரைக் கோயில்களில் இருக்கும் அரிட்டாபட்டியில் கி.மு 2-ம் நூற்றாண்டில் குஜராத்தில் இருக்கிற ‘காரோவனம்’ என்கிற இடத்தில் லகுலீசுவர் என்பவர் வாழ்ந்துவந்ததாகவும், தனது பனிரெண்டு வயதில் தீரா தவத்தில் இருந்த போது உயிரை விட்டதாக கருதி அவரை தீயிட்டு எரித்துவிட்டார்களாம். ஆனால் அவர் தனது தவத்தில் இருந்து வெளியே வந்து அனைவரின் முன்பும் பிரமாண்டமாக நின்றாராம். அவர் தன் வாழ்நாள் முழுவதும் சிவ வழிபாட்டை பரப்பியதாகவும் சொல்லப்படுகிறது. சிவபெருமானே லகுலீசுவரராக அவதாரம் எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அவர் வழிவகையாக வந்த சீடர்கள் சிலர் மதுரைக்கு வந்து சைவத்தை பரப்பினார்கள் என்கிறார்கள். அவர்களின் வழியிலேயே ‘ பாசுபத சைவம்’ என்கிற சிவ வழிபாடு தென்னகத்தில் பரவியதும் எனவும் குறிப்பிடப்படுகிறது. இந்த பாசுபத சைவ சிவழிபாடு மதுரையில் பெருமளவு பரவிய 7-ம் நூற்றாண்டில்தான் இங்கு லகுலீசுவருக்குக் குடைவரை கோயில் கொண்டுவரப்பட்டுள்ளது. புதுக்கோட்டை தேவர்மலையிலும், அரிட்டாபட்டியிலும் தான் லகுலீசுவருக்குக் கோயில்கள் உள்ளன என்பது கூடுதல் சிறப்பு. அழகான இந்த குடைவரைக் கோயிலும் அரிட்டாபட்டியில் பார்க்க வேண்டிய இடம்.
பறவைகள் வாழும் அரிட்டாபட்டி
ரேப்ட்டார்ஸ் என்று அழைக்கப்படும் பெரியவகை பறவைகள் அதிகமா இருக்கு. தென்னிந்தியாவில் எங்கும் இல்லாத அரிதா காணப்படும் பல பறவைகளும் உள்ளன. அதில் முக்கியமாக (லகார் ஃபால்கன்) லகுடு என்று அழைக்ககூடிய பறவை உள்ளது. இது மணிக்கு 250.கிமீ வேகத்தில் செல்லக்கூடிய திறன்படைத்தது. இதன் வேட்டையாடும் ஸ்டைலே, தனி தான். பறக்கும் போதே வேட்டையாடி சாப்பிடும். அதே போல சகின் ஃபால்கன் என்ற பறவை மணிக்கு 380 கி.மீ மேல் வேகத்தில் செல்லக்கூடியது. உலக அளவில் வேகமாக பறக்கும் வகை பறவையில் இதுவும் ஒன்று. இது தன் உணவை ஸ்பூப் முறையில் தேடும். துப்பாக்கி குண்டுகளைப் போல் சீறிப்பாயும் . இதன் மூக்குப் பகுதியில் காற்றை கட்டுபடுத்தக்கூடிய அமைப்பு உள்ளது எனவே அதிக வேகத்தில் செல்கின்றது அப்படி போனாலும் அதற்கு நுரையீரல் சீரகா இருக்கும். போனாலிஸ் ( ராஜாலிக் கழுகு ) என்று அழைக்கபடும் மிகவும் கம்பீரமாக இருக்கும் பறவை. ஆண்டிற்கு அதிக பட்சம் ஒரு முட்டை தான் பொரிக்கும் . சூழ் நிலையை கண்காணிப்பதில் நேர்த்தியுடையது. கூடு கட்ட கொண்டுவரும் குட்சிகளை நன்கு தேர்வு செய்து எடுத்து மிகவும் பாதுகாப்பாக கொண்டுவரும். 'பக்கிப்பறவை' அதிகமா ஆசைப்படுபவன ஏன்டா பக்கியாட்டம் அழைகிறாய் என்று திட்டுவார்கள்.
அதைப் போலதா இதன் செயலும் இருக்கும். நைட் ஜார் என்று அழைக்கபடும் இது பகல் முழுவதும் படுத்துக்கிடந்து இரவில் தனது வேட்டைக்கு கிளம்பும் . பக்கிப் பறைவகள் மரத்தில் அமருவது மிகவும் தெளிவாக அமைந்து தனது எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ளும். சிவப்புக் கழுத்து ஃபால்கன் , கேஸ்ட்ரால் , பூட்டட் ஈகிள், பிரவுன் பிஸ் ஈகில் , சார்டட் நெக் ஈகிள் , தேன் பருந்து , வெள்ளைக்கண் பருந்து , இந்தியன் ஸ்பாட்டடு ஈகிள் , இந்தியன் ஈகிள் அவுள் , புலு ராக் திரஸ், பிராமினி கிட், பிளாக் கிட், சிக்கார், ஸ்பாட்டட் அவுள் போன்ற 80க்கும் மேற்பட்ட பறவைகள் அரிட்டாபட்டில இருக்கு. பலபறவைகள் இன்னும் முழுமையா அடையாளங் காணப்படாததும் ஆச்சரியம் தான்.
கிராம மக்கள் பலரும் தற்சார்பு வாழ்க்கைய தான் கடை பிடிக்கிறாங்க. பெரிய நோய்களுக்கும் கிராமத்தில் கிடைக்கும் மூலிகைய பறித்து மருந்து வச்சுக்குவாங்க. வயல் நண்டு, மீன் என்று ஊரைச் சுற்றி எல்லாம் கிடைப்பதால் அசைவத்துக்கும் பஞ்சம் இல்ல. வாழ்ந்தா இந்த ஊர்ல தாண்டா வாழனும் என்று ஊருக்கு வந்தவரை சொல்ல வைக்கும் கிராமம் தான் அரிட்டாபட்டி. மதுரைக்கு வந்தா கண்டிப்பா அரிட்டாபட்டிக்கு ஒரு விசிட் அடிங்க.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion