மே 15 முதல் ஜூன் 15 வரை, 20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: ஏன் தெரியுமா?
கடந்த மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 20 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 20 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் திருத்தப்பட்ட ஐடி சட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது தொடர்பாக தனது மாதாந்திர அறிக்கையில் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது பயனாளர்களை ஆன்லைன் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய ஐடி சட்டத்தின் நிபந்தனைகள் என்ன?
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய ஐடி சட்டத்தின்படி, "சமூக வலைதளங்கள் அவற்றின் அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை வலைதளத்தில் வெளியிட வேண்டும். புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை பகிர வேண்டும்" போன்ற விதிமுறைகள் உள்ளன.
இந்நிலையில் புதிய விதிகளின்படி தாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து வாட்ஸ் அப் நிறுவனம், "நாங்கள் தொழில்நுட்பத்தின் மீதும், எங்களின் வாடிக்கையாளர்களின் மீதும் சிறந்த அக்கறையைக் கொண்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சமரசம் செய்வதில்லை. எங்களின் முதன்மையான கவனன், அபாயகரமான, தேவையற்ற கருத்துகள் வாட்ஸ் அப்பில் பரவாமல் தடுப்பதிலேயே இருக்கிறது. இத்தகைய விஷமங்களைப் பகிரும் கணக்குகளைக் கண்டறிய நாங்கள் நவீன முன்னேறிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம்.
அந்த வகையில் மே 15 முதல் ஜூன் 15 வரையிலான காலகட்டத்தில் 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை முடக்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம், வாடிக்கையாளர்கள் தங்களின் தகவல் பறிமாற்றத் தளத்தை அவதூறு பரப்பப் பயன்படுத்தாமல் இருக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஓர் அவதூறைப் பரப்பி அதன் மூலம் அசம்பாவிதங்கள் நடந்து அதன் பின்னர் எங்கிருந்து அந்தத் தகவல் பரவியது என்பதைக் கண்டறிவதைக் காட்டிலும் ஆரம்ப நிலையிலேயே அவதூறுகள் பரவாமல் தடுப்பதே மேல். அதைத்தான் நாங்கள் தொழில்நுட்ப உதவியுடன் செய்கிறோம்.
எங்களின் அவதூறு கண்டறியும் தொழில்நுட்பம் மூன்று வகையில் செயல்படுகிறது. பயனாளர் பதிவு செய்யும் போதும் செய்யும் கண்காணிப்பு, தகவல் பரிமாற்றத்தின் போதான கண்காணிப்பு. ஒரு கருத்துக்கு எந்த மாதிரியான பின்னூட்டம், குறிப்பாக எதிர்மறை பின்னூட்டம் வருகிறது என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பம் மூலம் இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்கிறோம். பயனாளர்கள் ரிப்போர்ட், ப்ளாக் பட்டன்களைப் பயன்படுத்தும்போது எங்களுக்கு குறிப்பிட்ட ஒரு கணக்கை கண்காணிக்கும் வேலை தொடங்கிவிடுகிறது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர அறிக்கையை புதிய ஐடி சட்டத்தின் கீழ் வெளியிட்டிருந்தாலும் கூட, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளது. அதில், புதிய ஐடி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. இந்தியாவில் வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு 40 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். புதிய ஐடி சட்டத்தின் படி, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூகவலைதளங்களும் மாதாந்திர அறிக்கை செய்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.