Whatsapp: இந்தியாவில் 37 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் டிசம்பரில் முடக்கம்..! ஏன் தெரியுமா.?
36,77,000 நிறுத்தப்பட்ட கணக்குகளில், 13,89,000 கணக்குகள் பயனர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என முன்கூட்டிய அறிந்து தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப், டிசம்பர் 2022 இல் இந்தியா முழுவதும் 36.77 லட்சம் கணக்குகளுக்குத் தடை விதித்ததாக, தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் கீழ் வெளியிடப்பட்ட இந்திய மாதாந்திர அறிக்கையின் டிசம்பர் பதிப்பில் செய்தி அனுப்பும் தளமான வாட்ஸ்ஆப் இந்த செய்தியை வெளியிட்டது.
வாட்ஸ்அப் செயலி
வாட்ஸ்அப் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பிரபலமான மெசேஜிங் செயலியாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இதற்கான பயனர்கள் அதிகம். தற்போது இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரும் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். வெறும் தகவல்களை பரிமாறும் தளமாக மட்டுமல்லாமல், தற்போது பணப் பரிவர்த்தனை செய்யவும், தொழில் சம்பந்தமாக வீடியோ கால் பேசும் வசதியும், ஆவணங்களை அனுப்பவும் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது வாட்ஸ்அப் செயலி.
இப்படி பலரால் பயன்படுத்ததப்படும் செயலியை சிலர், பல தவறான செயல்களுக்காகவும் பயன்படுத்துவார்கள். அப்படி செய்யும் கணக்குகளை முடக்கும் வேலையை தொடர்ந்து செய்து பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த முயற்சிக்கிறது வாட்ஸ்ஆப் நிறுவனம். அப்படி மாதாமாதம் எத்தனை கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்களை சரியாக இரண்டாவது மாத துவக்கத்தில் வழக்கமாக அறிவித்து வருகிறது. அதே போல கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் எத்தனை கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்ற தகவலை தற்போது வெளியிட்டுள்ளது.
எத்தனை கணக்குகள் முடக்கம்?
கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 36.77 லட்சம் கணக்குகளுக்குத் தடை விதித்ததாக, வாட்ஸ்ஆப் அறிக்கை வெளியிட்டுள்ளது. 36,77,000 நிறுத்தப்பட்ட கணக்குகளில், 13,89,000 கணக்குகள் பயனர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என முன்கூட்டிய அறிந்து தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட கணக்குகள் தீங்கிழைக்கும் செயல்களில் ஈடுபட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் ‘பேட் (bad)’ என அழைக்கப்படும் இந்தக் கணக்குகள், தனது தளத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது தகவல்கள் பாதுகாப்பாக இருக்க, அவற்றை தடை செய்துள்ளனர்.
நவம்பரை ஒப்பிட்டால் குறைவு
இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து 1,607 புகார் அறிக்கைகளை குழு பெற்றது. மொத்த புகார்களில், 166 மேல்முறையீடுகள் மீது வாட்ஸ்அப் நடவடிக்கை எடுத்தது. நவம்பர் மாத எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது டிசம்பர் புள்ளிவிவரங்கள் சற்று குறைவாகவே உள்ளன. நவம்பரில், வாட்ஸ்அப் 37.16 லட்சம் கணக்குகளுக்கான சேவைகளை நிறுத்தியது, அதே நேரத்தில் முன்கூட்டியே நிறுத்தப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 90,000 ஆக இருந்தது. நவம்பர் 2022 இல் 946 புகார்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021
இந்தியாவில் செயல்படும் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் மற்றும் 50 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தால், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் ஒரு பகுதியாக மாதாந்திர இணக்க அறிக்கையை வெளியிட வேண்டும். வழிகாட்டுதல்களின்படி, இணக்கம் நிறுவனங்களால் பெறப்பட்ட வாடிக்கையாளர் புகார்கள் மற்றும் அத்தகைய அறிக்கைகளுக்கு எதிராக குழு எடுத்த நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை அறிக்கை வழங்க வேண்டும்.
அரசாங்கத்தின் இந்த வழிகாட்டுதல்கள் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திட்டமிடப்பட்ட அமைப்பாகும். வாட்ஸ்அப் இந்தியாவில் மிகவும் நம்பகமான செய்தியிடல் செயலிகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்தியாவில் 53 கோடிக்கும் அதிகமான மக்கள் தொடர்புகள் மற்றும் சமூக தொடர்புகளுக்காக வாட்ஸ்அப்பை நம்பியுள்ளனர். அதனால் இந்த நிறுவனம் தரும் மாதாந்திர அறிக்கை மிகவும் அவசியம் ஆகிறது.