(Source: ECI/ABP News/ABP Majha)
UPI Transactions: Gpay, PayTM யூஸ் பண்றீங்களா? ஒரு சூப்பர் அப்டேட்.. பட்டையை கிளப்பும் யுபிஐ.. மே மாதத்தில் டிரில்லியன் தொட்டு சாதனை!
கடந்த மே மாதத்தில் மட்டும் யுபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ. 14.3 டிரில்லியனாகவும் உயர்ந்துள்ளதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) தெரிவித்துள்ளது.
இந்த காலம் பெரும்பாலும் கைகளில் பணம் இல்லா காலமாகவே இயங்க தொடங்கிவிட்டது. கைகளில் காசு இருப்பதை விட மொபைல் இருந்தால் கிடைத்ததை வாங்கிகொண்டு, ஒரே நொடியில் யூபிஐ உள்ளிட்ட பரிவர்த்தனை தளங்களின் மூலம் பணத்தை பரிவர்த்தனை செய்துவிட்டு போய்கிட்டே இருக்கலாம். சில்லரை தொல்லை இனி இல்லை என்ற அளவிற்கு 1 ரூபாயாக இருந்தாலும் மற்றவருக்கு பணத்தை மாற்றிவிடலாம்.
இப்படியான சூழ்நிலையில், கடந்த மே மாதத்தில் மட்டும் யுபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ. 14.3 டிரில்லியனாகவும் உயர்ந்துள்ளதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) தெரிவித்துள்ளது.
இது கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் யுபிஐ பரிவர்த்தனை 2 சதவீதம் அதிகமாகவும், பண பரிவர்த்தனையில் 8.89 லட்சம் கோடியுடன் ஒப்பிடும் போது 6 சதவீத அளவிலும் அதிகரித்துள்ளது. NPCI படி, முந்தைய நிதியாண்டின் (2022-23) மே மாதத்துடன் ஒப்பிடும்போது, யுபிஐ பரிவர்த்தனை அளவு 58 சதவீதமும், பணமதிப்பில் 37 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்ட தரவுகளில், மே மாதத்தின் கடைசி பத்து நாட்களில் மட்டும் சுமார் 3.96 டிரில்லியன் மதிப்பில் யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 8.68 பில்லியனான இருந்தது. (இதன் பண மதிப்பு ரூ.14.1 டிரில்லியன்)
IMPS:
உடனடி பணம் செலுத்தும் சேவை (IMPS) பரிவர்த்தனைகளுக்கு, ஏப்ரல் மாதத்தில் இருந்த ரூ.5.21 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், மே மாதத்தில் சுமார் 1 சதவீதம் அதிகரித்து ரூ.5.26 லட்சம் கோடியாக உள்ளது. IMPS பரிவர்த்தனைகளின் அளவும் ஏப்ரல் மாதத்தில் 496 மில்லியனில் இருந்து மே மாதத்தில் 500 மில்லியனாக அதிகரித்துள்ளது. மார்ச் 2023 இல், இதன் அளவு 497 மில்லியனாக இருந்தது. (இதன் மதிப்பு ரூ.5.46 லட்சம் கோடி) மே மாத புள்ளிவிவரங்கள், கடந்த 2022 மே மாதத்தை ஒப்பிடும்போது பரிவர்த்தனை அளவில் 3 சதவீத வளர்ச்சியையும், பண மதிப்பில் 16 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது.
FASTag:
மே மாதத்தில் FASTag பரிவர்த்தனைகளின் அளவு 10 சதவீதம் அதிகரித்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 305 மில்லியனிலிருந்து 335 மில்லியனாக உயர்ந்துள்ளது. மதிப்பின் அடிப்படையில், ஏப்ரல் மாதத்தில் ரூ.5,149 கோடியாக இருந்த நிலையில், மே மாதத்தில் 6 சதவீதம் அதிகரித்து ரூ.5,437 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் உடன் ஒப்பிடும்போது இது 17 சதவீத பரிவர்த்தனை வளர்ச்சியையும், 24 சதவீத பண மதிப்பிலான வளர்ச்சியையும் கண்டுள்ளது. அதேபோல், மார்ச் 2023 இல், ரூ. 5,067 கோடி மதிப்பில் 306.3 மில்லியன் பரிவர்த்தனைகள் நடந்தன.
AePS:
ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறை (AePS) ஏப்ரல் மாதத்தில் 102 மில்லியனாக இருந்த நிலையில், மே மாதத்தில் 2.35 சதவீதம் குறைந்து 99.6 மில்லியனாக உள்ளது. மே 2023 இல் AePS பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.28,037 கோடியாக இருந்த நிலையில், இது ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும்போது ரூ.29,649 கோடியிலிருந்து 5.4 சதவீதம் குறைந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் மார்ச் 2023 இல் ரூ. 30,541 கோடி மதிப்பிலான 109.7 மில்லியன் பரிவர்த்தனைகளை விட கணிசமாகக் குறைவு. 22-23 ஆண்டு அடிப்படையில், AePS பரிவர்த்தனைகள் அளவு 9 சதவீதமாகவும், பண மதிப்பில் 8 சதவீதம் குறைந்துள்ளது.