Twitter Logo: “வேற வேலையே இல்லையா.." : மீண்டும் மாற்றப்பட்ட ட்விட்டர் லோகோ... கடுப்பான ட்விட்டர்வாசிகள்..
பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் செயலியின் லோகோவானது மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த செயலால் பயனாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் செயலியின் லோகோவானது மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த செயலால் பயனாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
டிஜிட்டல் உலகில் சமூக வலைத்தளங்கள் மக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. உடனுக்குடன் தகவல்களைப் பெறவும், உரையாடவும், தங்களை அப்டேட் ஆக வைத்துக் கொள்ளவும் கோடிக்கணக்கான பயனாளர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ட்விட்டர் தளம்
சமூக வலைத்தளங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ள ட்விட்டர் தளத்தை நீண்ட இழுத்தடிப்புக்கு பின் கடந்தாண்டு அக்டோபரில் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.3.65 லட்சம் கோடி) வாங்கினார். இதன்பிறகு தான் கதையே ஆரம்பிக்கிறது என்பது போல தினமும் தலைப்புச் செய்தியில் இடம் பெற வேண்டும் என எலன் மஸ்க் ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார்.
ட்விட்டரை வாங்கியவுடன் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பவர்கள் பணம் செலுத்த வேண்டும் என கூறினார். அடுத்ததாக நிறுவனங்களுக்கு தங்க நிற டிக், அரசு அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக் மற்றும் தனிநபர்களுக்கு நீல நிற டிக் என அடுத்தக்கட்ட யுக்தியை அறிமுகம் செய்தார். இதனையடுத்து நிறுவனத்தை சீர்படுத்த ஆள்குறைப்பு நடவடிக்கைகளிலும் இறங்கி விமர்சனங்களை சந்தித்தார்.
இது ஒருபுறமிருக்க ட்விட்டர் தளத்தில் படு ஆக்டிவாக எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார். பொழுது போகவில்லை என்றால் ஒரு ட்வீட் என்பது போல எலான் மஸ்க் தினமும் எதாவது ஒரு தலைப்பில் பதிவுகளை வெளியிடுவார். மேலும் அந்த தளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற நபர் என்ற பெருமையை கடந்த மாதம் எலான் மஸ்க் பெற்றார். சில சமயங்களில் யாரும் எதிர்பாராத வண்ணம் மற்ற பயனாளர்களின் பதிவுக்கு பதிலளிப்பார்.
மீண்டும் .. மீண்டும்.. லோகோ சர்ச்சை
இதனிடையே கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி ட்விட்டர் செயலியின் லோகோ மாற்றப்பட்டுள்ளது. ட்விட்டரின் அடையாளமாக கருதப்பட்ட நீல பறவை மாற்றப்பட்டு அதற்கு பதிலாக நாயின் புகைப்படம் வைக்கப்பட்டது. அந்த நாயானது ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனமாகும். அதேசமயம் Dogecoin எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளது. நகைச்சுவையாக பணம் செலுத்தும் முறையை குறிப்பிட மென்பொருள் பொறியாளர்களான பில்லி மார்கஸ் மற்றும் ஜாக்சன் பால்மர் ஆகியோர் Dogecoin கிரிப்டோகரன்சி முறை அறிமுகப்படுத்தினர். எலான் மஸ்க்கிற்கும் நீண்ட காலமாக Dogecoin கிரிப்டோகரன்சி முறையை ஊக்குவித்து வந்ததால் ட்விட்டர் லோகோ மாற்றப்பட்டிருந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் ட்விட்டர் லோகோ மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி பழைய நீல நிற குருவியே மீண்டும் இடம் பெற்றுள்ளது. எலான் மஸ்க் என்னதான் முடிவில் இருக்கிறார் என அவரின் இந்த நடவடிக்கையும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.