Twitter India: ட்விட்டர் இந்திய பிரிவு தலைவர் ‛டிரான்ஸ்பர்’ -காங்கிரஸ் கணக்குகள் முடங்கிய விவகாரத்தின் எதிரொலி!
“காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் போராடும். ட்விட்டரில் எங்களை முடக்குவதன் மூலம் எங்களைத் தடுக்க முடியாது” என தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் 5 மூத்த தலைவர்கள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸாரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் சமீபத்தில் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது. மத்திய அரசுக்கு ஆதரவாக ட்விட்டர் நிறுவனம் செயல்படுவதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பலதரப்பிலிருந்து ட்விட்டர் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி, அந்த சந்திப்பின்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டார். போக்சோ சட்டப்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படமோ, பெற்றோர், குடும்பதினரின் புகைப்படமோ சமூகவலைதளங்கள் அல்லது பத்திரிக்கைகளில் வெளியிட கூடாது. ஆனால் அதை மீறி ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டதும், அதை சில காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட கட்சியினர் பகிர்ந்ததும் தான் பிரச்னை என கூறப்பட்டது.
அது குறித்து தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் கொடுத்த புகாரின் பேரில், ராகுல் காந்தி பதிவிட்ட ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டது. மேலும், ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை முடக்கிவிட்டு ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது என்றும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ரந்தீப் சுர்ஜ்வாலா, முன்னாள் அமைச்சரும் பொதுச் செயலாளருமான அஜய் மக்கென், மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ், கட்சியின் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் ஆகியோரது ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டதாகவும் அப்போது தகவல் வெளியானது.
If Twitter #️⃣ will block the Account of our great leader 👑 Rahul Gandhi
— Joselin Raby (@JoselinRaby3) August 11, 2021
We Congress workers will hate 😡 the Twitter
இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பு துறையின் செயலாளர் வினீத் பூனியா, “காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் போராடும். ட்விட்டரில் எங்களை முடக்குவதன் மூலம் எங்களைத் தடுக்க முடியாது” என தெரிவித்தார். மேலும் டுவிட்டர் நிறுவனத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துவதாகவும், ட்விட்டர் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் மீது காங்கிரஸ் தரப்பிலும் எதிர்கட்சிகள் தரப்பிலும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. இதனால் ட்விட்டர் நிறுவனத்திற்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், ட்விட்டர் இந்திய பிரிவு தலைவர் மணிஷ் மகேஸ்வரிவை அமெரிக்காவிற்கு டிரான்ஸ்பர்(பணி மாற்றம்) செய்து ட்விட்டர் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. அனைவரின் கருத்துக்கு மதிப்பளிக்கும் விதமாக ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.