Tesla Job Offer: குறைஞ்சது 5.7 அடி உயரம் வேணும்; மணிக்கு ரூ.4 ஆயிரம் ஊதியம்- டெஸ்லால வேலைக்குப் போறீங்களா?
விண்ணப்பதாரர்கள் 5.7 அடி முதல் 5.11 அடி வரை உயரம் இருக்க வேண்டும். 7 மணி நேரத்துக்கும் மேலாக 30 பவுண்ட் எடையைச் சுமந்துகொண்டு நடப்பவராக இருக்க வேண்டும்.
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தில், மணிக்கு சுமார் 4 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்பட உள்ளது. அப்படி என்ன வேலை? ஏன் இவ்வளவு ஊதியம்? பார்க்கலாம்.
இதுகுறித்து டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’டெஸ்லாவின் தகவல் சேகரிப்புக் குழுவுக்கு உதவி செய்யும் உத்வேகம் நிறைந்த தனிநபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பணியின் முக்கிய நோக்கம் தகவல்களைத் திரட்டி, தேவையான கருத்துகளை அளிப்பதாகும். பணியில் சேரும் நபர், தரவு சார்ந்த முடிவுகளை எடுக்கக்கூடியவராக இருக்க வேண்டும். அதேபோல மாறும் மற்றும் வேகமான பணிச்சூழலில் பணிபுரிய ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும். ரோபாட்டிக்ஸ் துறையில் ஆர்வமும், டெஸ்லா வளர்ச்சிக்குப் பங்களிக்க விருப்பமும் உள்ள ஒருவரை நாங்கள் தேடுகிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- இந்தப் பணியின் பெயர் தகவல் சேமிப்பு ஆபரேட்டர் ஆகும்.
- விண்ணப்பதாரர்கள் 5.7 அடி முதல் 5.11 அடி வரை உயரம் இருக்க வேண்டும்.
- 7 மணி நேரத்துக்கும் மேலாக 30 பவுண்ட் எடையைச் சுமந்துகொண்டு நடப்பவராக இருக்க வேண்டும்.
- மோஷன் கேப்சர் சூட்களைப் பயன்படுத்த வேண்டி இருக்கும். அதனால் தேர்வு செய்யப்படும் நபர், மோஷன் கேப்டர் சூட் மற்றும் மெய்நிகர் ஹெட்செட்டை அணிந்துகொண்டு பயன்படுத்த வேண்டி இருக்கும்.
- எனினும் இந்த ஹெட் செட்களின் பயன்பாடு அல்லது மெய்நிகர் சூழலில் பணிபுரிவது சிலருக்கு அசெளகரியம் ஆகவும் சங்கடமானதாகவும் இருக்கலாம், இது VR சோர்வு அறிகுறிகளை (VR sickness symptoms) ஏற்படுத்தலாம்.
ஊதியம் எவ்வளவு?
இந்தப் பணிக்கான ஊதியம் ஒரு மணிக்கு 25 டாலரில் (ரூ.2,120) இருந்து 48 டாலர்கள் (ரூ.4 ஆயிரம்) வரை இருக்கலாம். இத்துடன் பிற ஊதியம், பங்குகள் உள்ளிட்ட லாபங்களும் இருப்பதாக டெஸ்லா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை குறித்து விவரமாக அறிய: https://www.tesla.com/careers/search/job/data-collection-operator-tesla-bot-night-shift-223213 என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.