Swiggy Drone Delivery: ட்ரோன் மூலம் டெலிவரி.. சென்னை நிறுவனத்துடன் கைகோக்கும் ஸ்விக்கி..
ட்ரோன்கள் மூலம் மளிகைப் பொருள்களை டெலிவரி செய்வதற்கான பணிகளை செய்ய, சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்துடன், ஸ்விக்கி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
ட்ரோன்கள் மூலம் மளிகைப் பொருள்களை டெலிவரி செய்வதற்கான பணிகளை செய்ய, சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்துடன், ஸ்விக்கி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவின் பிரபல உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றாக ஸ்விக்கி திகழ்கிறது. இந்தியாவின் இரண்டாம் தர, மூன்றாம் தர நகரங்கள் வரை பரந்து விரிந்திருக்கும் ஸ்விக்கி மூலம் தினம்தோறும் லட்சகணக்கானோர் உணவுகளை ஆர்டர் செய்கின்றனர். ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளை டெலிவரி செய்வதற்கென்றே, இந்நிறுவனத்திற்காகப் பலர் பணியாற்றுகின்றனர். சென்னை, பெங்களூரு, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக உணவுகளை டெலிவரி செய்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதை சரி செய்வதற்கான முயற்சிகளில் இந்த நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், ட்ரோன்கள் மூலம் பொருள்களை டெலிவரி செய்யும் முறையை தொடங்கியுள்ளது ஸ்விக்கி நிறுவனம்.
சீனா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இந்த முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், இந்தியாவில் முதல்முறையாக ட்ரோன் மூலம் டெலிவரி செய்யும் முறையை ஸ்விக்கி தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்ட நிலையில், 345 ட்ரோன் நிறுவனங்கள் போட்டியிட்டன. அவற்றில், தொழில்நுட்பம், நிதி உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் 4 நிறுவனங்களை ஸ்விக்கி நிறுவனம் தேர்வு செய்துள்ளது. அதில், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனமும் தேர்வாகியுள்ளது. இந்த ட்ரோன்களை வைத்து முதற்கட்டமாக டெல்லி மற்றும் பெங்களூருவிலும் பொருள்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
250 மில்லியன் டாலர்கள் சந்தை மதிப்புடன் இந்தியாவின் முன்னணி ட்ரோன் தயாரிப்பு நிறுவனமாக கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் விளங்குகிறது. 2024ம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் ட்ரோன்களை தயாரிக்க இந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. குர்கான் மற்றும் சென்னையில் உள்ள இந்நிறுவனத்தின் ட்ரோன் தயாரிப்பு மையத்தை பிரதமர் மோடி சமீபத்தில் தான் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Flying to India’s Doorstep.
— Garuda Aerospace Pvt Ltd (@garuda_india) April 30, 2022
We are extremely delighted to share that @garuda_india will be part of @swiggy_in’s pilot to evaluate the feasibility of drones for its instant grocery service, @SwiggyInstamart.
The pilot will start with immediate effect in #Bangalore. pic.twitter.com/n9y7P4xBia
முதற்கட்டமாக கருடா ஏரோஸ்பேஸ் ட்ரோன்கள் மூலம் பெங்களூருவிலும், ஸ்கை ஏர் மொபிலிட்டி நிறுவனத்தின் ட்ரோன்கள் மூலம் டெல்லியிலும் டெலிவரி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பாடங்கள் மூலம், அடுத்த கட்டமாக அன்ரா டெக்னாலஜிஸ், டெக் ஈகிள் மற்றும் மருட் ட்ரோன் டெக் நிறுவனங்களின் ட்ரோன்கள் இன்ஸ்டாமார்ட் டெலிவரிக்காகப் பயன்படுத்தப்படும். திரைப்படங்களில் வருவது போன்று வீட்டு வாசலுக்கே பொருள்கள் வந்து சேருமா என்றால் இப்போது கிடையாது. இது ‘Common Point’ என்ற அமைப்பு மூலம் செயல்படுத்தப்படும். அதாவது, பொருளை ஆர்டர் செய்தவுடன் ஆர்டரை எடுப்பவர் ட்ரோனில் பொருள்களை நிரப்புவார். அந்த ட்ரோனானது டெலிவரி பார்ட்னர் மூலம் ஆர்டர் செய்தவரின் இடத்திற்கு அருகே உள்ள ஒரு பொதுவான இடத்தில் கொண்டு சேர்க்கும். பொருளை ஆர்டர் செய்தவர் அங்கு பெற்றுக்கொள்ளலாம். இது எந்த அளவிற்கு பயன் தருகிறது என்பதைப் பொருத்து மற்ற நகரங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.