ONEPLUS SMART TV | 7,000 ரூபாய் வரையில் ஸ்மார்ட் டிவியின் விலையை உயர்த்திய ஒன் பிளஸ்!
இனி வரும் காலங்களில் ஸ்மார்ட் டிவிகளின் விலை 70 சதவிகிதம் வரை உயர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொழில்நுட்ப சந்தையில் அதிக கவனம் பெரும் நிறுவனம் ஒன் பிளஸ் . வெறும் மொபைல்போன் தாயாரிப்பு நிறுவனமாக அறிமுகமான ஒன் பிளஸ் இன்று கால் பதித்திருக்கும் துறைகளோ ஏராளம். ஆடை உற்பத்தி, ஸ்மார்ட் டிவி உற்பத்தி, லேப்டாப், டேப்ளட் என கலக்கி வருகிறது ஒன்பிளஸ். இந்நிலையில் தனது ஸ்மார்ட் டிவிகளின் விலையை இந்தியாவில் அதிகப்படுத்தியுள்ளது ஒன் பிளஸ். இது ஒன் பிளஸ் பிரியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாத இறுதியில் சியோமி தனது ஸ்மார்ட் டிவிகளின் விலையை அதிகப்படுத்த போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது . இந்நிலையில் ஒன் பிளஸ் நிறுவனமும் தனது ஸ்மார்ட் டிவிகளின் விலையை உயர்த்தியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு Y சீரிஸ் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. தொடர்ந்து புதிய U1S ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. தற்போது இந்த இரு டிவி சீரிஸ் விலையைத்தான் ஒன்பிளஸ் உயர்த்தி இருக்கிறது. குறிப்பாக 7,000 ரூபாய் வரையில் குறிப்பிட்ட பிராண்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி ₹16,499 க்கு விற்கப்பட்ட OnePlus TV 32Y1 ஸ்மார்ட் டிவியானது ₹2,500 விலை உயர்த்தப்பட்டு தற்போது ₹18,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ₹23,999 விற்கப்பட்ட OnePlus TV40Y1 ஸ்மார்ட் டிவியானது தற்போது ₹2,500 விலை உயர்த்தப்பட்டு ₹26,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ₹26,999 விலையில் இருந்த OnePlus TV43Y1 ஆனது தற்போது ₹29,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ₹2,500 விலை உயர்வை கண்டுள்ளது. அதே போல OnePlus TV 55U1S ஆனது ₹47,999 இல் இருந்து ₹5,000 விலை உயர்த்தப்பட்டு தற்போது ₹52,999 -க்கு விற்பனையாகிறது. OnePlus TV 65U1s ஆனது ₹6,000 விலை உயர்ந்து ₹68,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் எல்லாவற்றையும் விட உச்சமாக Oneplus TV 50U1S ஸ்மார்ட் டிவியானது ₹7,000 விலை உயர்த்தப்பட்டு ₹39,999-இல் இருந்து தற்போது ₹46,999-க்கு விற்பனைக்கு சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்ட இந்த புதிய தொகையினை ஒன்பிளஸ் நிறுவனம் தனது விற்பனை தளங்களில் அப்டேட் செய்துவிட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்மார்ட் டிவியின் பாகங்கள் சீனா மற்றும் வியட்நாமில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. ’ஓபன் செல் ‘ எனப்படும் ஸ்மார்ட் தொலைக்காட்சி பேனல்களுக்கான தட்டுப்பாடு உலகம் முழுவது நிலவி வருவதாலேயே ஸ்மார்ட் டிவி நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி வரும் காலங்களில் ஸ்மார்ட் டிவிகளின் விலை 70 சதவிகிதம் வரை உயர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.





















