OnePlus Nord 2 5G | ''அலர்ட் மக்களே'' - இது முதல்முறை அல்ல! வெடித்து சிதறிய OnePlus Nord 2 5G !
எப்போது வெடிக்கும் என தெரியாமல் கையில் வைத்துக்கொண்டு சுத்தும் வெடிகுண்டிற்கு சமமானது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி என காட்டமாக தெரிவித்துள்ளார் வழக்கறிஞர் கவுரவ்.
டெல்லியில் வழக்கறிஞர் ஒருவர் பயன்படுத்தி வந்த புத்தம் புது ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி மொபைல்போன் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் கவுரவ் குலாட்டி. இவர் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி மொபைல்போனை அமேசான் ஆன்லைன் தளத்தில் வாங்கியுள்ளார். கடந்த புதன்கிழமையன்று நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் அறையில், வழக்கறிஞர்களுக்கு உரிய கருப்பு அங்கியை அணிந்தபடி தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது தனது அங்கியில் இருந்து வெப்பம் தன் உடலில் பட்டுள்ளது. சுதாரித்துக்கொண்ட அவர் தனது வழங்கறிஞர் அங்கியை கழட்டி தூக்கி வீசியுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று பகுதியில் சிறிய காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
#Blast & #Fire in my brand new #oneplusnord25g.@OnePlus_IN Today morning while i was in my office ( Court Chamber) @OnePlusNord2_ @oneplus @OnePlus_USA pic.twitter.com/TwNKNmnhzo
— GAURAV GULATI (@Adv_Gulati1) September 8, 2021
அங்கியின் அருகே கவுரவும் அவரது நண்பர்களும் பார்த்தபோது பாக்கெட்டில் வைத்திருந்த புத்தம் புது ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி மொபைல் போனில் புகை வெளியேறிய வண்ணம் இருந்திருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மொபைல்போன் திடீரென வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வழக்கறிஞர் கவுரவ் கூறுகையில் “ வாங்கி சில நாட்களே ஆன நிலையில் , பழைய மொபைல் போனில் இருந்த டேட்டாவை கூட இதுக்கு மாத்தல, என்னால அந்த அதிர்ச்சியில இருந்து வெளியே வரவே முடியல , நான் சம்பந்தப்பட்ட ஒன் பிளஸ் நிறுவனம் மற்றும் பொருள் வாங்கிய அமேசான் நிறுவனம் மீது வழக்கு தொடர போகிறேன்” என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து எப்போது வெடிக்கும் என தெரியாமல் கையில் வைத்துக்கொண்டு சுத்தும் வெடிகுண்டிற்கு சமமானது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி என காட்டமாக தெரிவித்துள்ளார் வழக்கறிஞர் கவுரவ். மேலும் வழக்கறிஞர் அங்கியில் வெடித்து சிதறிய ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி மொபைல்போனின் புகைப்படங்களை ட்விட்டர் வாயிலாக பகிர்ந்து ஒன்பிளஸ் நிறுவனத்தை டேக் செய்துள்ளார். இதற்கு பதிலளித்த நிறுவனம் “எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளுங்கள், உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்கிறோம் “ என குறிப்பிட்டுள்ளனர்.அதற்கு பதிலளித்த கவுரவ் , “நான் சட்டப்பூர்வமாகவே நடவடிக்கை எடுத்துக்கொள்கிறேன், உங்கள் அலட்சியத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் “ என தெரிவித்துள்ளர்.
பிரபல ஆண்ட்ராய்ட் மொபைல் நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி மொபைல் போனை கடந்த ஜூலை ரூ. 27,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. கடந்த ஆகஸ்ட் மாதமே வாங்கிய 5 நாட்களில் பெண் ஒருவரின் கை பையில் வைத்திருந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி மொபைல் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பதிலளித்த ஒன்பிளஸ் நிறுவனம் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழாது என உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.