Smart Phones Launch 2024: ஸ்மார்ட்ஃபோன் வாங்க திட்டமிருக்கா.. ஜனவரியில் சந்தைக்கு வரும் 14 புதிய மாடல்கள்..உங்களுக்கான லிஸ்ட் இதோ
Smart Phones Launch 2024: இந்திய ஸ்மார்ட் ஃபோன் சந்தையில் ஜனவரி மாதத்தில் அறிமுகமாக உள்ள, பல்வேறு நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட் ஃபோன்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Smart Phones Launch 2024: இந்திய ஸ்மார்ட் ஃபோன் சந்தையில் ஜனவரி மாதத்தில் சாம்சங் மற்றும் ஒன்பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தரப்பில் இருந்து, மொத்தமாக 14 புதிய ஸ்மார்ட் ஃபோன்கள் விற்பனைக்கு வர உள்ளன.
புதிய ஸ்மார்ட் ஃபோன்கள் அறிமுகம்:
உலக மக்கள்தொகையில் முதலிடம் வகிக்கும் இந்தியா பல்வேறு துறைகளுக்கும் முக்கிய சந்தையாக உள்ளது. அதில், ஸ்மார்ட் ஃபோன் சந்தையும் தவிர்க்க முடியாதது. இதன் காரணமாக தான் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான புதிய மாடல் ஸ்மார்ட் ஃபோன்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகின்றன. அந்த வகையில், தொழில்நுட்ப ஆர்வலர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, ஜனவரி மாதத்தில் ஏராளமான புதிய ஸ்மார்ட் ஃபோன்கள் அறிமுகமாக உள்ளன. சாம்சங், ரெட்மி, ஒன்பிளஸ், ரியல்மி மற்றும் விவோ உள்ளிட்ட சிறந்த பிராண்டுகள், தங்களது புதிய மாடல்களை வெளியிட தயாராக உள்ளன. அப்படி, இந்த மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் பல்வேறு பிராண்டுகளின் ஃபோன்களின் பட்டியல் இங்கே வழங்கப்பட்டுள்ளது.
Realme 12 சீரிஸ்:
நடப்பாண்டில் இந்தியாவில் வெளியாக உள்ள முதல் ஸ்மார்ட் ஃபோன் ரியல்மி நிறுவனத்தை சார்ந்ததாக இருக்கும். காரணம், ஜனவரி 3ம் தேதி அந்நிறுவனத்தின் வெளியீட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, Realme 12 Pro மற்றும் Realme 12 Pro+ மாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Redmi Note 13 series:
Xiaomi நிறுவனமானது ஜனவரி 4 ஆம் தேதி இந்தியாவில் Redmi Note 13 சீரிஸை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் Redmi Note 13 5G, Redmi Note 13 Pro 5G மற்றும் Redmi Note 13 Pro+ 5G ஆகிய மூன்று மாடல்கள் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் 6.67-இன்ச் 1.5K முழு-HD+ AMOLED திரைகள் மற்றும் 16MP செல்ஃபி கேமரா ஆகியவற்றை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
OnePlus 12 series:
OnePlus நிறுவனம் அதன் முதன்மையான (பிளாக்ஷிப்) OnePlus 12 மற்றும் மலிவு விலையில் OnePlus 12R மாடல்களை ஜனவரி 23ம் தேதி அன்று அறிமுகப்படுத்துவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. OnePlus ஃபோன்கள் பிரீமியம் வடிவமைப்பு மற்றும் ஒழுக்கமான கேமராக்கள் கொண்ட பவர்ஹவுஸ் தொகுப்பை வழங்குவதில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
Samsung Galaxy S24 சீரிஸ்:
இந்திய ஸ்மார்ட் ஃபோன் சந்தையில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கொரிய நிறுவனமான சாம்சங், வழக்கபோல் இந்த ஜனவர் மாதத்திலும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக சில புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. சரியான தேதி கூறப்படாவிட்டாலும், Samsung Galaxy S24 சீரிஸ் ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. அடுத்த நிலை கேமராக்கள், அற்புதமான டிஸ்பிளே மற்றும் புராசசிங் பவர் ஆகியவற்றுடன் இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு மூன்று மாடல்கள் வெளியான நிலையில், நடப்பாண்டில் Galaxy S24, Galaxy S24+ மற்றும் Galaxy S24 Ultra ஆகியவற்றை அறிமுகப்படுத்த சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Vivo X100 series:
அற்புதமான கேமரா திறன் வாய்ந்த ஸ்மார்ட் ஃபோனைத் தேடுகிறீர்கள் என்றால், எல்லாப் பணிகளையும் கையாளும் அளவுக்குப் போதுமான ஆற்றலைக் கொண்ட புதிய மாடலை விவோ நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, Vivo X100 மற்றும் X100 Pro ஸ்மார்ட்போன்களை ஜனவரி 4 ஆம் தேதி சந்தைப்படுத்த உள்ளது. அதிநவீன கட்டிங் எட்ஜ் கேமரா தொழில்நுட்பம் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Poco X6 சீரிஸ்:
Poco X6 சீரிஸிற்கான வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன ரெட்மி சாதனைப் போன்ற உட்புற அம்சங்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Poco X6 ஆனது Redmi Note 13 Pro 5G இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Oppo Reno 11:
மற்றொரு சீன நிறுவனமான Oppo ஜனவரி 11 ஆம் தேதி இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் Reno 11 சீரிஸை அறிமுகப்படுத்த உள்ளது. Reno 11 ஆனது Mediatek Dimensity 1080 ஐக் கொண்டிருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், Oppo Reno 11 Pro Dimensity 8200 அல்லது Snapdragon 8+ Gen 1 SoC மூலம் இயக்கப்படலாம்.
மோட்டோரோலா மோட்டோ ஜி34 5ஜி:
ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா மோட்டோ ஜி34 5ஜி மாடல், இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான மோட்டோ ஜி 32-யின் மேம்படுத்த மாடலான மோட்டோ ஜி34 5ஜி ஸ்னாப்டிராகன் 695 SoC ஆல் இயக்கப்படுகிறது. இதில் பிரதான கேமராவாக 50MP வழங்கப்பட்டுள்ளது..