Realme P4 Power: இது போனா இல்ல பவர்பேங்க்கா.?! முரட்டு பேட்டரியுடன் வரும் ரியல்மியின் P4 பவர் 5ஜி; வெளியீடு எப்போ.?
Realme P4 Power 5g: 10,001mAh பேட்டரி பேக் கொண்ட ஒரு போனை, ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு வாரம் நீடிக்கும் என்று கூறி, Realme நிறுவனம் டீசர் செய்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

இந்த ஆண்டு, ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பவர் பேங்க்கின் தேவையை நீக்கும் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. சீன நிறுவனமான ரியல்மி, 10,001mAh பேட்டரி கொண்ட போனை அறிமுகப்படுத்தும் என்று ஒரு அறிக்கை இப்போது கூறுகிறது. இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு வாரம் நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. கடந்த ஆண்டு, 10,000mAh பேட்டரி கொண்ட போனின் கான்செப்ட்டை நிறுவனம் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இப்போது, இந்த பேட்டரி பேக்கின் பெருமளவிலான உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
சிறந்த பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்
ஊடக அறிக்கைகளின்படி, ரியல்மி தனது P4 பவர் போனில் 10,001mAh டைட்டன் பேட்டரியை பொருத்தக்கூடும். நிறுவனம் இன்னும் போனின் விவரக்குறிப்புகளை வெளியிடவில்லை, ஆனால், அது நீண்ட பேட்டரி ஆயுளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இந்த போன் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அதன் சிறந்த செயல்திறனை உறுதி செய்யும் என்று ரியல்மி கூறுகிறது.
இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும், வெறும் 219 கிராம் எடையுடன் மிகவும் மெல்லியதாக (Pencil-thin body) இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 32.5 மணிநேரம் வரை வீடியோ பார்க்கலாம். பேட்டரி வெறும் 10% இருக்கும்போது கூட, எவ்வித தடையுமின்றி கேம்களை விளையாட முடியும் என ரியல்மீ கூறுகிறது. குறிப்பாக இந்த போனில் 3 சதவீத சார்ஜ் இருந்தால் கூட 1 மணி நேரம் 52 நிமிடங்கள் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
மேலும், கடினமான சூழ்நிலைகளிலும் பேட்டரி தொடர்ந்து திறமையாக செயல்படும் என்றும் கூறப்படுகிறது. சமச்சீர் முறையில் ஒரே சார்ஜில் போன் பல நாட்கள் நீடிக்கும் என்பதைக் காட்டும் புகைப்படத்தை நிறுவனத்தின் தயாரிப்பு சந்தைப்படுத்தல் தலைவர் பகிர்ந்துள்ளார்.
வெளியீடு மற்றும் அம்சங்கள்
ரியல்மி, தனது புதிய மாடலான ரியல்மீ பி-4 பவர் 5ஜி-ஐ இந்திய சந்தையில் ஜனவரி 29-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
80W வேகமான சார்ஜிங் மற்றும் பிற சாதனங்களுக்கு சார்ஜ் செய்யும் வகையில் 27W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. 1.5K தெளிவுத்திறன் கொண்ட 1.5K 4D Curve+ டிஸ்ப்ளே, 144Hz புதுப்பிப்பு விகிதத்தைக் (Refresh Rate) இந்த போன் கொண்டிருக்கும். பின்புறம் 50MP மெயின் கேமரா உள்ளிட்ட 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த மெகா பேட்டரி போன் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான Realme UI 7.0 மூலம் இயங்கும். இதற்கு 3 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களும், 4 ஆண்டுகளுக்குப் பாதுகாப்பு அப்டேட்களும் வழங்கப்படும் என ரியல்மி உறுதியளித்துள்ளது. இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. ட்ரான்ஸ் சில்வர் (TransSilver), ட்ரான்ஸ் ஆரஞ்சு (TransOrange) மற்றும் ட்ரான்ஸ் ப்ளூ (TransBlue) ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.
சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, இதன் 12GB RAM+256GB மெமரி கொண்ட மாடலின் பாக்ஸ் விலை 37,999 ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. எனினும், விற்பனைக்கு வரும்போது, இதன் உண்மையான விலை இதைவிடக் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை ப்ளிப்கார்ட் தளம் மற்றும் ரியல்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்கிக் கொள்ளலாம்.





















