OPPO : ஓப்போவின் மடிக்கும் வகை புதிய ஸ்மார்ட்ஃபோன்.. அறிமுகம் எப்போது? சிறப்பம்சங்கள் என்ன?
ஓப்போ நிறுவனத்தின் மடிக்கும் வகையிலான புதிய ஸ்மார்ட் போனின் வெளியீட்டு தேதி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் உள்ள ஓப்போ நிறுவனம், சராசரியாக 10 சதவிதத்திற்கும் அதிகமான சந்தை விற்பனையை கொண்டுள்ளது. பல்வேறு காரணங்களால் பல முன்னணி நிறுவனங்களின் ஏற்றுமதி மற்றும் விற்பனை நடப்பாண்டில் சரிவை சந்தித்து இருந்தாலும், ஓப்போ நிறுவனம் மட்டும் வளர்ச்சியை கண்டுள்ளது.
குறிப்பாக, கடந்த நிதியாண்டின் 3வது காலாண்டில் 13% ஆக இருந்த ஓப்போ நிறுவனத்தின் விற்பனை, நடப்பாண்டின் 3வது காலாண்டில் 16% ஆக உயர்ந்துள்ளது. பயனாளர்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து, அடுத்தடுத்து பல்வேறு அம்சங்களுடன் புதிய மாடல் செல்போன்களை அறிமுகப்படுத்துவது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அந்த வகையில் அண்மையில், ஓப்போ நிறுவனத்தின் புதிய மாடலான Reno 9 Series ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்போன் அறிமுகம்:
இதனிடையே, கடந்த ஆண்டு ஒப்போவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக ஃபைண்ட் N அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது தனது ஃபைண்ட் N2 சீரிஸ் ஸ்மார்ட் போன் டிசம்பர் 15ம் தேதி சீன சந்தையில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதைதொடர்ந்து, இந்தியாவிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதில் ஃபைண்ட் N2 மற்றும் ஃபைண்ட் N2 ஃப்ளிப் என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. ஃபைண்ட் N2 மாடல் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும்.
ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
இந்த ஆண்டு ஃபைண்ட் N2 மாடலுடன் தனது முதல் மடிக்கும் வகையிலான போன் மாடலையும் ஒப்போ அறிமுகம் செய்து உள்ளது. இந்த ஸ்மார்ட் போன்களின் வெளியீட்டை உறுதிப்படுத்தும் வகையில் டீசர் ஒன்றையும் ஒப்போ நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதன்படி ஒப்போ ஃபைண்ட் N2 மாடலில் டூயல் E6 AMOLED டிஸ்ப்ளே, மடிக்கக்கூடிய ஸ்கிரீன்களில் முற்றிலும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஜீரோ கிரீஸ் கொண்ட ஹின்ஜ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மிக குறைந்த எடை கொண்ட கார்பன் ஃபைபர் ஃபிரேம், இண்டகிரேட் மார்டைஸ் மற்றும் டெனான் டிசைன், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போனின் விலை:
வெறும் 233 கிராம் எடைகொண்ட ஃபைண்ட் N2 மாடல் மிக குறைந்த எடை கொண்ட மடிக்கக்கூடிய போன் என்ற அந்தஸ்தை பெறும் என கூறப்படுகிறது. முன்னதாக ஹானர் மேஜிக் Vs மாடல் 261 கிராம் எடையுடன் மிகவும் எடை குறைந்த ஃபோல்டபில் போன் என்ற பெருமையை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போனின் பாகங்களை மறு கட்டமைப்பு செய்து, புதுமையான பொருட்களை கொண்டு இந்த நிலையை எட்டியதாக ஒப்போ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 4300mAh திறனுடைய பேட்டரி கொண்ட மடிக்கக் கூடிய ஃபைண்ட் N2 போனின் விலை ரூ.99,990 ஆக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.