புதிய குரோம்புக்கில் இதெல்லாம் இருக்கா? கூகுள் வெளியிட்ட அதிரடி அப்டேட்ஸ்… என்னென்ன அம்சங்கள்?
திரையின் அளவை பெரிதாக்குதல், தவறான USB Type-C கேபிளைக் கண்டறிதல், கையால் எழுதப்படும் நோட்ஸ்-ற்கான புதிய கர்சிவ் ஆப் போன்ற பல அதிரடி அப்டேட்டுக்களை கூகுள் குரோம்புக்கில் தர உள்ளது.
கூகுள் தனது Chromebookக்கான ஒரு மிகப்பெரிய அப்டேட்டை அறிவித்துள்ளது. இந்த அப்டேட் ஆனது Chrome OS உடன் இயங்கும் PC களுக்கு பல புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது. இதில் தவறான USB Type-C கேபிளைக் கண்டறிதல், கையால் எழுதப்படும் நோட்ஸ்-ற்கான புதிய ஆப் என பல விஷயங்களில் அப்டேட்டை கொண்டுவந்துள்ளது.
திரையின் அளவை பெரிதாக்குதல்
திரையின் பெரிதாக்கப்பட்ட பகுதியின் அளவைக் கட்டுப்படுத்தும் திறனையும் கூகுள் கொண்டு வருகிறது. கண்டெண்ட்டை மேலும் பெரிதாக்க நினைத்தால் பயனர்கள் அதை இப்போது செய்ய முடியும். மீண்டும் சிறிதாக்குவதற்கும் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பயனர் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்றவாறு ஸ்க்ரீன் அளவை மாற்றிக்கொள்ளலாம்.
கர்சிவ் ஆப்
கூகுள், கடந்த ஆண்டு, ஒரு சில டிவைஸ்களில் கர்சிவ் என்ற புதிய ஆப்பை வெளியிட்டது. இந்த ஆப் மூலம் பயனர்கள் கையால் ஸ்க்ரீனில் எழுதி குறிப்பெடுத்துக் கொள்ளலாம். இந்த ஆப் மிகவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றதால் தற்போது, கூகுள் நிறுவனம் Cursive ஆப்பை உலகளவில் உள்ள அனைத்து Chromebook களுக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. “உங்கள் Chromebook இல் கையால் எழுதப்பட்ட குறிப்புகளைப் திருத்தவும், ஒழுங்கமைக்கவும் Cursive ஆப் உதவுகிறது. கையால் எழுதுவது மட்டுமின்றி, வரைபடங்களை வரையலாம் அல்லது வெளியில் இருந்து படங்கள் எடுத்து தேவைப்படும் இடங்களில் பேஸ்ட் செய்யலாம்", என்று கூகிள் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது. இனிமேல் வரவிருக்கும் எல்லா குரோம்புக்குகளிலும் இந்த ஆப் ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வாங்கியவர்கள் இந்த ஆப்பை google.cursive.chrome என்ற வலைப்பக்கத்தில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
தவறான கேபிள்
Chromebooks இல் வரும் மற்றொரு அம்சம், தவறான USB Type-C கேபிள் சாதனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியும் திறன் ஆகும். பயனர்கள் பயன்படுத்தும் USB-C கேபிள் அவர்களின் லேப்டாப்பில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் Chromebooks பயனர்களுக்குத் தெரிவிக்கும் என்று Google கூறியுள்ளது. அவர்கள் பயன்படுத்தும் கேபிள், தங்கள் Chromebook செய்யும் உயர் செயல்திறன் USB4 அல்லது Thunderbolt 3 தரநிலைகளை ஆதரிக்கவில்லை என்றால், பயனர்கள் இந்த அறிவிப்பை பெறுவார்கள். இந்த அம்சம் 11 அல்லது 12வது தலைமுறை Intel Core CPUகளுடன் USB4 அல்லது Thunderbolt திறன் கொண்ட Chromebookகளில் கிடைக்கிறது. வரவிருக்கும் மாதங்களில் Google அதை மேலும் பல Chromebook களில் கிடைக்கும்படி வழிவகை செய்யும் என்று குறிப்பிட்டுள்ளது.
வேறென்ன எதிர்பார்க்கலாம்?
கூகுள் வரும் மாதங்களில், ஸ்டைலஸ் ஸ்ட்ரோக்கின் (எழுதப்பயன்படுத்தும் பேனா) தடிமன், ஸ்டைல் மற்றும் நிறத்தை அதன் கர்சிவ் செயலிக்கு ஏற்றவாறு மாற்றுவது போன்ற அம்சங்களையும் அறிமுகப்படுத்தும் என்று கூறியது.