மொபைல் ஸ்க்ரீனைப் பயன்படுத்தி கொரோனா டெஸ்ட்டா? ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்றாங்க?
பி.சி.ஆர் சோதனையின் போது தொண்டை மற்றும் மூக்கில் ஏற்படும் அசௌகரியத்தை உணர்ந்தவர்கள் நம்மில் ஏராளம். இதற்கு தீர்வாக மொபைல் திரை சோதனை ஒன்று வந்துள்ளது.
பொதுவாக மொபைல்போன்களை நாம் அழைப்புகளை மேற்கொள்வதற்கும், குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் பயன்படுத்திய காலம் மாறி, இன்று நம்முடைய அன்றாட செயல்பாடுளுக்கே பெரும்பாலும் ஸ்மார்ட்போன்களை நம்மியிருக்கும் காலக்கட்டமாக மாறிவிட்டது. கொரோனா பெருந்தொற்று சமயங்களில் குழந்தைகள் படிப்புகள் முதல் அலுவலக வேலை வரை அனைத்து வகையிலும் ஸ்மார்ட்போன்கள் உறுதுணையாக இருந்து வருகின்றன. இந்நிலையில் ஸ்மார்ட்போன்களின் திரைகளை பயன்படுத்தி கொரோனா பரிசோதனை செய்யலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தற்பொழுது கொரோனா பரிசோதனை செய்ய, மூக்கு அல்லது தொண்டையில் எடுக்கப்படும் மாதிரிகளை பயன்படுத்துகிறார்கள். இவ்வகை சோதனை முறையை பி.சி.ஆர் டெஸ்ட் என அழைக்கிறார்கள். இந்த வகை சோதனையின் போது தொண்டை மற்றும் மூக்கில் ஏற்படும் அசௌகரியத்தை உணர்ந்தவர்கள் நம்மில் ஏராளம். இதற்கு தீர்வாக மொபைல் திரை சோதனை ( Phone Screen Testing (PoST) ) அமையும் என்கின்றனர் ஆரய்ச்சியாளர்கள்.
பொதுவாக ஒருவர் பேசும்பொழுதோ, தும்மும் பொழுதோ நீர்த்திவலைகளை வெளியேற்றுவார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வெளியேற்றும் நீர்திவலையானது வைரஸுடன் வெளியேறுகிறது. இவை நோயாளிகளுடன் பயணிக்கும் மொபைல்போன்கள் மீது படிவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் . எனவே மொபைல் ஸ்க்ரீன் மீது படிந்துள்ள அந்த மாதிரிகளை எடுத்து , சோதனைக்கு உட்படுத்தினாலே போதும் துல்லியமான பரிசோதனை முடிவை பெறலாம் என்கின்றனர் ஆராய்சியாளர்கள். போஸ்ட் சோதனையை பொறுத்த வரையில் மொபைல்போன் ஸ்க்ரீனில் வைரஸ் சாப்பிள் ஒரு துணி மூலம் எடுக்கப்பட்டு, அவை நேரடியாக உப்பு நீர் கரைசலில் வைக்கப்பட்டு, பின்னர் வழக்கமான பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
லண்டன் பல்கலைகழகம் போஸ்ட் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இதற்காக 540 நபர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆர்.டி.பிசிஆர்( மூக்கு மற்றும் தொண்டை வழியாக மாதிரிகளை எடுத்தல் ) மற்றும் போஸ்ட் (மொபைல் திரையில் மாதிரிகளை எடுத்தல்) சோதனைகள் என இரு சோதனைகளும் வெவ்வேறு ஆய்வகங்களில் நடத்தப்பட்டன.. இதில் அதிக வைரஸ் தொற்று கொண்ட நபர்களின் ஸ்மார்போன் திரையில் 81.3% முதல் 100% வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் அவற்றை சோதனைக்கு உட்படுத்தும்பொழுது 98.8% துல்லியமான முடிவுகளை கொடுத்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன. ஒரு சிலருக்கு இது தவறான முடிவுகளை கொடுத்தாலும் , மூக்கு, தொண்டை வழியே எடுக்கப்படும் மாதிகளை கொண்டு எடுக்கப்படும் பிசிஆர் சோதனைகளிலும் இது போன்ற ஃபால்ஸ் பாசிட்டிவ் கிடைப்பது வழக்கமான ஒன்றுதான் என்கின்றனர் ஆராய்சியாளர்கள். இவ்வகை சோதனைகளை மருத்து குழு உதவிகள் இன்றியே எடுத்துக்கொள்ள முடியும் என்றும், நேரம் மற்றும் செலவினங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே தெரிவிக்கின்றனர். மேலும் உலகில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான மக்களுக்கு , அதன் அறிகுறிகள் இல்லாமல் இருப்பதால் அவர்கள் மூலம் வைரஸ் பரவ வாய்புகள் அதிகம் எனவே அனைவருக்குமான சோதனை என்பது சாத்தியமானால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்பதே மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது.