Youtube Partner Programme: யூ ட்யூப் பார்ட்னர் ப்ரோகிராம் மூலம் இணைந்து சம்பாதிப்பது எப்படி?.. டிப்ஸ் இதோ!
யூட்யூப் தளத்தைப் பயன்படுத்தும் க்ரியேட்டர்கள் Youtube Partner Programme திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இதற்காக சில தகுதிக் குறிப்புகளை யூட்யூப் நிறுவனம் முன்வைக்கிறது. அவை என்ன?
யூட்யூப் சர்வதேச அளவில் மிகப்பெரிய வீடியோ ஷேரிங் வலைதளமாக மாறியுள்ளது. கூகுள் நிறுவனம் கடந்த 2006-ஆம் ஆண்டு யூட்யூப் வளர்ச்சிக்காக, புதிய அம்சங்களை வெளியிட்டு, பயனாளிகளை அசர வைத்து வருகிறது. தொடக்க காலத்தில், வெகு சில க்ரியேட்டர்களுக்கு மட்டும் பணம் வழங்கி வந்த யூட்யூப் தற்போது உலகம் முழுவதும் ஏறத்தாழ 20 லட்சம் க்ரியேட்டர்கள் அதிக பணத்தைத் தொடர்ந்து யூட்யூப் மூலமாக சம்பாதித்து வருவதாக அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில், யூட்யூப் தளம் க்ரியேட்டர்கள், படைப்பாளிகள், ஊடக நிறுவனங்கள் ஆகிய அனைவருக்கும் 30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணத்தை அளித்துள்ளது. மேலும், பணம் ஈட்டுவதற்காக விளம்பரங்கள், யூட்யூப் ப்ரீமியம், சூப்பர் சேட், சூப்பர் ஸ்டிக்கர்ஸ், சூப்பர் தேங்க்ஸ், மெம்பர்ஷிப், விற்பனைப் பொருட்கள், டிக்கட்கள், BrandConnect மற்றும் பிற நிதி ஆதாரங்களின் வழியாக யூட்யூப் வளர்ந்து வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு, அமெரிக்காவில் ஏறத்தாழ 3 லட்சம் முழு நேரப் பணிகள் யூட்யூப் தளத்தால் உருவாகியிருப்பதாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளது யூட்யூப்.
யூ ட்யூப் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அலுவலர் நீல் மோகன், Youtube Partner Programme திட்டத்தில் ’2 மில்லியன்’ என்ற மைல்கல் கடக்கப்பட்டிருப்பதாகப் பெருமிதம் தெரிவித்துள்ளார். 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், யூட்யூப் தளத்தில் கண்டெண்ட் உருவாக்கும் க்ரியேட்டர்களுக்கு ஒரு தொகையை ஒதுக்கியது யூட்யூப் நிறுவனம். தொடக்க காலத்தில் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது இயல்பான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது.
இப்படியான வெளிப்படையான திட்டம் என்ற போதும், யூட்யூப் தளத்தைப் பொருத்தவரை, கடந்த ஆண்டு ஒவ்வொரு 10 ஆயிரம் வியூஸ் நிகழும் போதும், அதில் வெறும் 16 முதல் 18 வியூஸ் மட்டுமே யூட்யூப் கொடுத்திருக்கும் விதிமுறைகளை மீறியுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
யூட்யூப் தளத்தைப் பயன்படுத்தும் க்ரியேட்டர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இதற்காக சில தகுதிக் குறிப்புகளை யூட்யூப் நிறுவனம் முன்வைக்கிறது. அவை என்ன?
1. குறைந்த பட்சம் 1000 சப்ஸ்க்ரைபர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
2. கடந்த 12 மாதங்களுக்குள், 4 ஆயிரம் மணி நேரங்கள் watch hours ஆகப் பார்க்கப்பட்டிருக்க வேண்டும்.
3. Community Guidelines-இல் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த விதிமுறையும் மீறப்பட்டிருக்கக் கூடாது.
4. க்ரியேட்டர்கள் தங்கள் AdSense அக்கவுண்டை யூட்யூப் அக்கவுண்டுடன் இணைக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் வரும் யூட்யூப் சேனல்கள் எதுவும், யூட்யூப் விதித்துள்ள விதிமுறைகளை மீறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று யூட்யூப் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வெறுப்புப் பேச்சு, பிறருக்குத் தொல்லை கொடுத்தல், பொய்யான தகவல்கள் முதலானவை தடுக்கப்பட வேண்டும் என்று யூட்யூப் கூறுகிறது.