Google Map Street View: இந்தியாவில் முதல் முறையாக... வீட்டிலிருந்தே இடங்களை பார்க்க கூகுள் ஸ்டிரீட் வியூ..
இந்தியாவில் கூகுள் ஸ்டிரீட் வியூ வசதி இன்று முதல் சில நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் செல்லும் வழியை தேடும் நபர்களுக்கு கூகுள் மேப்ஸ் நல்ல உதவியாக அமைந்துள்ளது. இந்த கூகுள் மேப்ஸ் பலருக்கு ஒரு இணையம் மூலம் செயல்படும் இட வழி காட்டியாக திகழந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கூகுள் மேப்ஸ் ஸ்டிரீட் வியூ என்பது உலகளவில் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த வசதியை விரைவில் இந்தியாவில் கொண்டு வர கூகுள் நிறுவனம் அனைத்து முயற்சிகளை எடுத்து வந்தது.
இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக கூகுள் மேப்ஸ் ஸ்டிரீட் வியூ விருப்பம் செயல்பட தொடங்கியுள்ளது. இந்தியாவில் இந்தத் திட்டத்தை கூகுள் நிறுவனம் ஜென்சிஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தி உள்ளது.
தற்போது இந்தியாவிலுள்ள 10 நகரங்களில் சுமார் 1,50,000 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த கூகுள் ஸ்டிரீட் வியூ செயல்பட தொடங்கியுள்ளது. இந்த வசதியை இந்தாண்டு இறுதிக்குள் 50 நகரங்களில் கூகுள் நிறுவனம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கூகுள் மேப்ஸ் துணை தலைவர் மிரியம் கார்த்திகா டேனியல், “இந்தியாவில் இந்த கூகுள் ஸ்டிரீட் வியூ வசதி அறிமுகம் செய்வது மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும். இந்த வசதி மூலம் வெர்சுவல் முறையில் இடங்களை வீட்டில் இருந்த படியே பார்க்கலாம்.
இந்தியாவில் இந்த வசதியை ஜென்சிஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவற்றின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் உள்ளூர் அமைப்புகள் மற்றும் அரசு உடன் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம். முக்கியமான விஷயங்களை நாங்கள் நம்பிக்கை தரத்துடன் தர முயன்று வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல் முறையாக தற்போது சென்னை,டெல்லி, மும்பை,ஹைதராபாத்,புனே, நாஷிக், வதோதரா,அஹமத் நகர்,அமிர்தசர்ஸ் உள்ளிட்ட நகரங்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் 50 நகரங்களில் இந்த ஸ்டிரீட் வியூ வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. கூகுள் ஸ்டிரீட் வியூ மூலம் வெர்ச்சுவலாக நாம் இருக்கும் இடத்திலிருந்து மற்றொரு இடத்தை பார்க்கும் வசதி உண்டு. இந்த வசதி வெளிநாடுகளிலும் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த வசதி தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது பலரிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க:ஸ்மார்ட் டிவிகளை களமிறக்கும் Acer நிறுவனம்! வாங்கலாமா? விலை எப்படி?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்