கர்நாடகா: கேமிங் லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி கொடுத்த ஃபிளிப்கார்ட்!
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர், அதனை ரிட்டர்ன் செய்ய முயன்றுள்ளார். ஆனால் விற்பனையாளர் ரிட்டர்ன் பாலிசி கொடுக்கவில்லை.
கர்நாடக மாநிலத்தில் ஃப்ளிப்கார்ட்டில் கேமிங் லேப்டாப் ஆர்டர் செய்த ஒருவருக்கு கல்லும், பழைய கணினி உதிரிப்பாகங்களும் கிடைத்த சம்பவம் நடந்தேறி உள்ளது.
லேப்டாப் ஆர்டர் செய்தவர் ஏமாற்றம்
கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த சின்மயா ரமணா என்பவர் பிக் தீபாவளி சேலில் பிளிப்கார்ட்டில் கேமிங் லேப்டாப்பை ஆர்டர் செய்துள்ளார். வந்ததும், பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில் பழைய கணினி உதிரிபாகங்களுடன் பெரிய கல் ஒன்று அடங்கிய பெட்டி கிடைத்ததை கண்டு அதிர்ந்துள்ளார். அக்டோபர் 15 ஆம் தேதி, சின்மயா தனது நண்பரிடம் Flipkart Plus மெம்பர்ஷிப் இருந்ததால், Asus TUF Gaming F15 என்ற கேமிங் லேப்டாப்பை ஆர்டர் செய்தார். அது அவரிடம் அக்டோபர் 20 அன்று வந்து சேர்ந்தது. வெளியில் இருந்து சீல் வைக்கப்பட்ட அந்த பெட்டி வெளியில் இருந்து பார்க்க நன்றாக இருந்ததால் சின்மயா டெலிவரி செய்பவருடன் OTP ஐப் பகிர்ந்து கொண்டு வாங்கிக்கொண்டுள்ளார்.
கல்லும் உதிரி பாகங்களும்
ஆனால் அந்த ஃபிளிப்கார்ட் பேக்கேஜை திறந்தபோது, உள்ளே பார்கோடுகள் மற்றும் தயாரிப்பு விவரங்கள் அகற்றப்பட்டு ஒரு சேதப்படுத்தப்பட்ட கணினி இருந்துள்ளது. பெட்டிக்குள் மடிக்கணினி தவிர அனைத்தும் இருந்துள்ளது. அதில் பழைய கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் மற்றும் ஒரு கல் இருந்ததால், பெட்டி கனமாக தெரிந்துள்ளது. அதற்காகவே அவர்கள் அந்த கல்லையும் வைத்துள்ளனர் என்று தெரிகிறது.
ரிட்டர்ன் செய்யும் முயற்சி
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர், அதனை ரிட்டர்ன் செய்ய முயன்றுள்ளார். ஆனால் விற்பனையாளர் ரிட்டர்ன் பாலிசி கொடுக்கவில்லை. ஆனாலும் ஃபிளிப்கார்ட் மூலம் ரிட்டர்ன் செய்யும் முறையில் ரெக்வெஸ்ட் கொடுத்துள்ளார். அதன் மூலம் விற்பனையாளரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் இப்போதும் வந்த பார்சல் அப்படியே இருப்பதாக சின்மயா கூறியுள்ளார். சின்மயா, பிளிப்கார்ட் சிக்கலை விரைவில் விசாரித்து, பணத்தையோ, பொருளையோ தருவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
காத்திருக்கும் சின்மயா
"எல்லா ஆதாரங்களுடனும் ஒரே நாளில் Flipkart க்கு விஷயத்தை தெரிவித்தேன். அவர்கள் திரும்பப் பெற சிறிது கால அவகாசம் தேவை என்று பதிலளித்தனர். அக்டோபர் 23 அன்று, விற்பனையாளர் திரும்பக் கோரிக்கையை நிராகரித்ததாகவும், போக்குவரத்தின் போது தயாரிப்பு சேதமடையவில்லை என்றும் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள், "என்று சின்மயா கூறினார். இதுபோன்ற மோசடிகள் நடப்பது இது முதல் முறையல்ல. சமீபத்தில், பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஒருவர் ஃபிளிப்கார்ட்டிலிருந்து லேப்டாப்பை ஆர்டர் செய்தார், ஆனால் அவருக்கு டிடர்ஜென்ட் சோப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. சின்மயாவுக்கு ஃப்ளிப்கார்ட் நீதி பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்.