Facebook Admin Assist : பொய் செய்தி உள்ளே வரக்கூடாது.. புதிய சுவர் எழுப்பும் பேஸ்புக்! வருகிறது அட்மின் அசிஸ்ட்!!
பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள `அட்மின் அசிஸ்ட்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய அம்சம், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்காக பேஸ்புக் குழு அட்மின்கள் பயன்படுத்தும் விதமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக் குழு அட்மின்களுக்காகப் புதிய சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மெடா நிறுவனத்தின் சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் சமீபத்தில் போலிச் செய்திகளைத் தடுக்கும் விதமாக இந்தப் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பம்சங்கள் போலி செய்திகளைக் கண்டறிவதை மட்டுமின்றி, குழு அட்மின்களின் பணியைக் குறைப்பதோடு, தொடர்ந்து பேஸ்புக் குழுக்களைத் திறமையாகக் கையாளவும் இந்த அம்சங்கள் பயன்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள இந்த அம்சம் `அட்மின் அசிஸ்ட்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சிறப்பம்சத்தின் மூலம் பேஸ்புக் குழுக்களின் தவறான தகவல்களும், போலிச் செய்திகளும் அடங்கிய பதிவுகளைப் பதிவிடும் போது, தானாகவே அவற்றை நீக்கும் அம்சத்தை அட்மின்களுக்கு வழங்குகிறது `அட்மின் அசிஸ்ட்’.
மேலும், பேஸ்புக் குழுக்களில் கொடுக்கப்பட்டிருந்த `மியூட்’ என்ற ஆப்ஷன் தற்போது நீக்கப்பட்டு, `சஸ்பெண்ட்’ என்று மாற்றப்பட்டிப்பதன் மூலம், குழு உரையாடல்களில் ஒருவரை மியூட் செய்வது மட்டுமின்றி தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யவும் பயன்படுகிறது. இது போஸ்ட் செய்வது, ரியாக்ட் செய்வது, கமெண்ட் செய்வது, குழுவில் ரூம்களை உருவாக்குவது, ரூம்களுக்குள் நுழைவது முதலான அனைத்தில் இருந்து தற்காலிகமாக நீங்க வைக்கிறது.
பேஸ்புக் நிறுவனம் சேர்த்துள்ள மற்றொரு சிறப்பம்சத்தின் மூலம், குழுக்களின் அட்மின்கள் குழுவில் புதிதாக இணையும் உறுப்பினர்களின் ரெக்வஸ்ட்களை ஏற்றுக் கொள்வதையும், மறுத்து நீக்குவதையும் சில காரணிகளின் அடிப்படையில் செயல்பட வைக்கிறது. இதன்மூலம் பேஸ்புக் குழுக்களின் அட்மின்களின் பணிச்சுமை குறையும் எனவும், குழுக்களை இன்னும் சிறப்பாக நடத்த முடியும் எனவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.
டெஸ்க்டாப் கணினிகளில் பேஸ்புக் பயன்படுத்தும் அட்மின்களின் பேஸ்புக் ஹோம் பேஜ் வடிவமைப்பும் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. மொபைலில் பயன்படுத்தும் அட்மின்களுக்குப் புதிய லே அவுட், இன்சைட்ஸ் சம்மரியைப் பார்க்கும் பக்கம் முதலானவை அப்டேட் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் குழுக்களில் உள்ள ஷேர் மெனுவைப் பயன்படுத்தி அட்மின்களால் தங்கள் குழுக்களை டவுன்லோட், காபி, பேஸ்ட் முதலானவற்றோடு விளம்பரம் செய்ய முடியும். மேலும் பேஸ்புக் நிறுவனம் QR கோட் சப்போர்ட்டையும் புதிதாக இணைத்துள்ளது. பயனாளர்கள் QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலம், நேரடியாக பேஸ்புக் குழுவின் About பக்கத்திற்கு நேரடியாகச் செல்வதோடு, குழுவில் இணைவதையும், இணைவதற்கான அழைப்பை விடுப்பதும் மேற்கொள்ளலாம். குழுக்களில் இணைய விரும்புவோருக்கு இ மெயில் மூலமாக அழைப்பு விடுக்கும் புதிய சிறப்பம்சத்தையும் குழு அட்மின்களுக்கு வழங்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.
முதலில் பேஸ்புக்கில் இருக்கும் பொதுக் குழுக்களுக்கு மட்டுமே அட்மின் அசிஸ்ட் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது பேஸ்புக்கில் உள்ள பொதுக் குழுக்கள் மட்டுமின்றி, தனிப்பட்ட குழுக்களுக்கும் அட்மின் அசிஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.