Mastodon: ட்வீட்டுக்கு பதிலாக டூட்ஸ்.. ட்விட்டரில் இருந்து மாஸ்டடோனுக்கு படையெடுக்கும் நெட்டிசன்ஸ்.. காரணம் என்ன?
எலான் மஸ்க்கால் ட்விட்டர் கையகப்படுதப்பட்டதைத் தொடர்ந்து கூகுளில் மாஸ்டடோன் செயலி பற்றிய தேடல்கள் அதிகரித்தன. குறிப்பாக இந்நிறுவனம் பிறந்த் இடமான ஐரோப்பாவில் மாஸ்டடோன் பற்றிய தேவை அதிகரித்தது.
சமூக வலைதள செயலியான ட்விட்டருக்கு மாற்றாக கடந்த சில நாள்களாக Mastodon தளத்தில் பலரும் புதிய கணக்குகளைத் தொடங்கி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 27ஆம் தேதி உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது முதல் பல ட்விட்டர் பயனாளிகளும் மாஸ்டடோன் தளத்துக்கு மாறி வருகின்றனர்.
முன்னதாக ப்ளூ டிக்குக்கு கட்டணம் வசூல் செய்வதாக அறிவித்தது, ட்விட்டர் ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்தது உள்ளிட்ட பல காரணங்களால் அதிருப்தியில் இருந்த பல பயனர்கள் மாஸ்டடோனுக்கு மாறத் தொடங்கினர். இந்நிலையில், மாஸ்டடோன் 4,89,003 புதிய பயனர்களை ஈர்த்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆக்டிவ் பயனர்களை தற்போது பெற்றுள்ளதாக மாஸ்டடோன் நிறுவனரும், தலைமைச் செயல் அலுவலருமான யூஜென் ரோச்கோ நேற்று (நவ.07) தனது பதிவிட்டுள்ளார்.
ட்விட்டரில் தினசரி 238 மில்லியன் ஆக்டிவ் பயனர்கள் செயல்பட்டு வரும் நிலையில், அதனை ஒப்பிடும்போது இது மிகச் சிறிய எண்ணிக்கையாகவே உள்ளது. ஆனால் எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியது தொடங்கி மாஸ்டடோனில் புதிதாக கணக்கைத் தொடங்கும் பயனர்கள் கணிசமாக அதிகரித்துள்ளனர். 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜெர்மனிய நிறுவனமான மாஸ்டடோன், இதற்கு முன்னதாக இவ்வளவு கவனத்தைப் பெற்றதில்லை என, யூஜென் ரோச்கோ இரண்டு நாள்களுக்கு முன் பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்க்கால் ட்விட்டர் கையகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து கூகுளில் மாஸ்டடோன் செயலி பற்றிய தேடல்கள் அதிகரித்தன. குறிப்பாக இந்நிறுவனம் பிறந்த் இடமான ஐரோப்பாவில் மாஸ்டடோன் பற்றிய தேவை அதிகரித்தது.
மாஸ்டடோனின் சிறப்பம்சங்கள்
- மாஸ்டடோன் மற்ற சமூக வலைதளங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதில் ஒருவர் இணைய வேண்டுமெனில் தங்களுக்கு பிடித்தமான சர்வர்களை முதலில் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு சர்வரும் தனித்துவமானவை.
- மாஸ்டடோனில் கணக்கு தொடங்க முதலில் ஒரு குறிப்பிட்ட சர்வரில் ஒரு பயனர் பதிவு செய்ய வேண்டும்.
- சர்வர்களை எவர் வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஒவ்வொரு சர்வருக்கும் அதன் சொந்த விதிகள் மற்றும் கொள்கைகள் இருக்கும்.
- நீங்களே விதிகளை அமைக்க விரும்பினால், உங்கள் சொந்த சர்வரைத் தொடங்கலாம்.
- "இனவெறி, பாலியல் பாகுபாடு, தன் பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் திருநர்களுக்கு எதிரான வெறுப்பு ஆகியவை குறித்த பதிவுகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கும் "மாஸ்டோடன் உடன்படிக்கையில்" கையொப்பமிடப்பட்ட சர்வர்கள் பட்டியல் இங்கு உள்ளன.
- ட்விட்டரைப் போலவே எந்த பிரச்சனையும் இல்லாமல் இங்கும் பயனர்களை பின் தொடரலாம்.
- மாஸ்டடோன் கிட்டத்தட்ட ட்விட்டரை ஒத்த அனுபவத்தைக் கொடுத்தாலும் சில முக்கிய வேறுபாடுகளும் உள்ளன. மாஸ்டடோனில் பதிவுகள் ட்வீட்டுக்கு பதிலாக டூட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.
- ட்விட்டரைப் போல் இங்கு இரண்டு மடங்கு எழுத்துக்கள் அதாவது 500 கேரக்டர்கள் கொண்ட பதிவைப் பகிரலாம். உரை மற்றும் படங்களுக்கான ஸ்பாய்லர் எச்சரிக்கைகளை க்ளிக் செய்வது போன்ற கூடுதல் அம்சங்களும் இதில் உள்ளன.
- டிரெண்டிங் தலைப்புகளுக்கு ட்விட்டரைப் போலவே இங்கும் ஹேஷ்டேக்குகளும் செயல்படுகின்றன.