Jio Prepaid Tariff: ஜியோவை மலைபோல நம்பும் வாடிக்கையாளர்கள்.! அதிர்ச்சி கொடுக்குமா? அம்பானி போடும் மாஸ்டர் ப்ளான்!!
ஏர்டெல், வோடபோனை தொடர்ந்து ஜியோவும் விலையேற்றம் செய்யுமா? ஜியோ போடும் கணக்கு என்னவாக இருக்கும்?
நெட்வொர்க் என்றால் ஏர்டெல் தான் என தனிக்காட்டு ராஜாவாக நின்றது அந்நிறுவனம். வோடோபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் ஏர்டெல்லுடன் மல்லுக்கட்டின. சிறந்த நெட்வொர்க், பல ப்ளான்கள் என ஏர்டெல் அழுத்தமாக நின்றது. குறிப்பாக இண்டர்நெட் வரவுக்கு பிறகு ஏர்டெல் மேலும் தன் எல்லையை பரப்பியது. காட்டுக்குள்ளும் நெட் கிடைக்கும் போன்ற பிரத்யேக விளம்பரங்கள், 2ஜி, 3ஜி, 4ஜி என அடுத்தடுத்த அப்டேட்களை அள்ளித் தூவி தான் கொடுப்பதுதான் நெட் ப்ளான் என செல்போன் உலகை ஆண்டது ஏர்டெல். மாதத்துக்கு 2ஜிபி நெட் வைத்து ஓட்டிய காலங்கள் அவை.
ஜியோவின் வருகை:
ஏர்டெல் கல்லா கட்டிக்கொண்டு இருந்த நேரத்தில் தான் மாஸாக களம் இறங்கியது ஜியோ. அதன்பிறகு இண்டர்நெட் உலகில் ஏற்பட்டது பெரும் புரட்சி என்று கூட சொல்லலாம். தொடக்கத்தில் இலவசமாக இண்டர்நெட் கொடுக்கப்பட்டது. மாதத்திற்கு 2 ஜிபி என்று லிமிடெட் மீல்ஸ் சாப்பிட்ட இணைய உலகம், ஒரு நாளைக்கே 2ஜிபி என்ற அன்லிமிடெட் மீல்ஸால் நிறைந்தது. ஜியோ கொடுத்த ஆஃபர்களால் திக்குமுக்காடியது வாடிக்கையாளர்கள் மட்டுமே அல்ல. போட்டி நிறுவனங்களும் தான். ஜியோ அள்ளிக்கொடுக்கும் போது நாம் கிள்ளிக்கொடுத்தால் சரியாகுமா? என யோசித்த மற்ற நிறுவனங்கள் இறங்கி வரத் தொடங்கின. ஆனால் ஜியோ அளவுக்கு இறங்க முடியவில்லை. இதனால் காலம்காலமாக ஏர்டெல், வோடோபோன் என பயன்படுத்திக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் அந்த சிம்கார்டை இன்கம்மிங்குக்கு மட்டுமே என பயன்படுத்தத் தொடங்கினர். பலரும் இண்டர்நெட் பேக்கேஜ் என்றால் ஜியோ தான் என்று ஒதுங்கத் தொடங்கினர். இதனால் அடிவாங்கியது ஏர்டெல், வோடோபோன்.
இப்போது விலை உயர்வு.!
ஜியோவின் விலைக்கு நிகராகவே பயணித்து வந்த ஏர்டெல்,வோடபோன் நிறுவனங்கள் தற்போது விலையை அதிகரித்துள்ளன. முதலில் விலை ஏற்றத்தை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தது AIRTEL. அதனைத் தொடர்ந்து ரீச்சார்ஜ் கட்டணத்தை 25 % வரையில் உயர்த்தியது வோடஃபோன்.
ஏன் இந்த விலையேற்றம்?
ஏன் இந்த திடீர் விலையேற்றம் என வாடிக்கையாளகள் தான் ஷாக் ஆகியுள்ளனர். தொலைத் தொடர்பு நிறுவனங்களை உன்னிப்பாக கவனிக்கும் நபர்கள் இது எதிர்பார்த்த ஒன்றுதான் என கூறுகின்றனர். ஜியோவின் வருகைக்கு பிறகு மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நஷ்டத்தையே சந்தித்து வந்தது என்றும், அதனால் இந்த விலை உயர்வு அவர்களின் கட்டாயம் என்பது எழுதப்பட்ட விதி என சொல்லப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Counterpoint Research இன் ஆராய்ச்சி ஆய்வாளர் ஒருவர் ,'' உலக நாடுகளை ஒப்பிட்டால் இந்தியாவில் நெட்வொர்க் செலவு என்பது கம்மி தான். ஆனால் இது நெட்வொர்க் நிறுவனங்களுக்கு பெரிய லாபத்தை கொடுக்கவில்லை என்று சொல்லலாம். அதனால் விலை உயர்வை கட்டாயம் கொண்டு வர வேண்டியே தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இருந்தன. அதனை ஏர்டெல் முன்னெடுத்தது. அதனை வோடோபோன் பின் தொடர்ந்தது என்றார்.
இந்த விலை உயர்வால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது லாபத்தை சந்திக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனாலும் இந்த அதிக தொகையை வாடிக்கையாளர்கள் சமாளித்து நிற்பார்களா என்ற சந்தேகமும் உள்ளது. குறைந்த கட்டணத்தில் அதிக வாடிக்கையாளர்கள் இருப்பதை விட அதிக கட்டணத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கை வாடிக்கையாளர்கள் இருந்தாலே லாபம் தான் என தொலைத் தொடர்பு நிறுவனங்கள் முடிவு எடுத்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. அதாவது தெறித்து ஓடுபவர்கள் ஓடட்டும், இருப்பவர்கள் இந்த தொகையை கொடுத்தாலே போதும். அவர்களுக்கு உருப்படியா நாங்க நெட்வொர்க் கொடுப்போம் என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது.
ஜியோவும் விலை ஏற்றம் செய்யுமா?
இந்தியாவை பொறுத்தவரை ஜியோ நல்ல லாபத்தில் தான் தற்போது இயங்கி வருகிறது. ஏர்டெல், வோடோபோன் போன்று நஷ்டத்தில் இயங்கவும் இல்லை. அதனால் உடனடி விலையேற்றம் செய்யவேண்டிய கட்டாயம் ஜியோவுக்கு இல்லை. ஆனாலும் ஜியோவும் ஒரு கார்ப்ரேட் கம்பெனி என்பதை மறக்க வேண்டாம். மற்ற நிறுவனங்களின் விலையேற்றத்தால் வாடிக்கையாளர்கள் இங்கு ஓடி வரட்டும். கூட்டம் சேர்ந்தாலே மேற்கொண்டு லாபம் என ஒரு நிலைப்பாட்டில் ஜியோ இருக்கலாம். வாடிக்கையாளர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்து இப்போது இருக்கும் விலையும் இல்லாமல் மற்ற நிறுவனங்களின் விலை அருகேயும் செல்லாமல் மீடியமாக ஒரு விலையேற்றத்தை நிச்சயம் ஜியோ செய்யும் என்பதையே ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
செல்போனையும், இண்டர்நெட்டையும் நம்பியே ஓடத்தொடங்கிய வாடிக்கையாளர்கள் வேறு வழியின்றி விலையேற்றத்தை புலம்பிக் கொண்டே கடந்துபோகத்தானே வேண்டும் என்பதுதான் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பெரிய நம்பிக்கை. பெட்ரோல் விலையை நாம் கடந்து செல்வது போல....