WTC 2021 : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 3வது நாள் ஆட்டம் - முழுமையாக கைப்பற்றிய நியூசிலாந்து!
கடைசி 68 ரன்களில் 7 விக்கெட்களை இழந்த இந்திய அணி 217 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் சுருண்டது!
101/2 என்ற வலுவான நிலையில் மூன்றாவது நாள் ஆட்டத்தை நிறைவு செய்துள்ளது நியூசிலாந்து அணி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் மழையால் கைவிடப்பட, இரண்டாவது நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மையால் பாதியிலேயே தடைபட, இந்திய அணி 146/3 என்ற ஸ்கோருடன் 3வது நாள் ஆட்டத்தை துவங்கியது. களத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும், துணை கேப்டன் ரஹானேவும் நிற்க ரசிகர்கள் நம்பிக்கையுடன் 3வது நாளை எதிர்பார்த்தனர், ஆனால் நடந்ததோ நம்பிக்கைக்கு மிக மாறானது.
10 ரன்களில் 2 விக்கெட்
நேற்று 44 ரன்களுடன் களத்தில் நின்ற விராட் கோஹ்லி, இன்று தனது ரன் கணக்கை தொடங்காமலேயே ஆட்டமிழந்தார். அடுத்ததாக உள்ளே வந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் 4 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார். 146/3 என 3வது நாளை தொடங்கிய இந்திய அணியின் நிலைமை சில நிமிடங்களிலேயே 156/5 என மாறியது.
ஏமாற்றிய ரஹானே
இந்தியாவின் டாப் 5 காலியான நிலையில் ரசிகர்களின் பார்வை அத்தனையும் ரஹானேவின் மீது திரும்பியது. அதற்கு ஏற்ப ரஹானேவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஷார்ட் பாலுக்கு பெயர் போன வேக்னர் வீசிய பந்தில் 49 ரன்கள் எடுத்திருந்த ரஹானே ஆட்டமிழந்தார். இதில் என்ன கொடுமை என்றால், அவுட் ஆவதற்கு முந்தைய பால் ஷார்ட் பாலாக வீசப்பட்டது, அப்போது ரஹானே தடுமாற்றமான ஷாட்டை அடித்தார். அதை கண்ட கேப்டன் வில்லியம்சன் ஸ்கொயர் லெக் திசையில் பீல்டரை மாற்றி நிற்க வைத்தார். அதை ரஹானேவும் கிவனித்தார், அடுத்த பாலும் ஷார்ட் ஆக வேக்னர் வீச சரியாக அதே இடத்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணியின் வியூகம் ஒர்க் அவுட் ஆனது, 182/6 என இந்திய அணி சரிந்தது.
கடைசி 68 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களில் சுருண்ட இந்திய அணி
அதன் பின் உள்ளே வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சில பவுண்டரிகளை விளாச 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக இஷாந்த் சர்மா 4, பும்ரா 0, ஜடேஜா 15 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 217 ரன்களில் முதல் இன்னிங்சில் சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த தவறிய இந்திய அணி
மேகமூட்டமான வானிலை, ஸ்விங் ஆகி அலைந்து திரியும் பந்துகள் இந்தியா பெரிய ஸ்கோரை அடையவில்லை என்றாலும் ஒரு நம்பிக்கையை நமக்கு ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சு மீண்டும் அந்த நம்பிக்கையை உடைத்தது. நியூசிலாந்து பந்து வீசிய போது பெரிய அளவில் ஸ்விங் ஆன பந்துகள், இந்திய அணி வீசிய போது அந்த அளவிற்கு ஆகவில்லை. மேலும் எளிதாக இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களை விட்டு கொடுக்காவிட்டாலும், விக்கெட் எடுக்கும் பந்துகளை தொடர்ச்சியாக வீச தவறினர். அதேநேரம் நியூசிலாந்து அணியின் ஓபனர்கள் டாம் லாதம், டேவான் கான்வே சிறப்பாக விளையாடினர். விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடந்த இந்த ஜோடி கடக்க, பொறுமையாக இந்திய அணியின் பிடியிலிருந்து ஆட்டம் நழுவி கொண்டிருந்தது.
அஸ்வின் & கோஹ்லி மேஜிக் 70/1
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்று ஒரு சுழற்பந்து வீச்சாளர்கள் கூட இல்லாமல் நியூசிலாந்து அணி களமிறங்கிய நிலையில், 15-வது ஓவரே அஸ்வினை பந்துவீச அழைத்தார் கோஹ்லி. மிக டைட்டாக பந்துவீசிய அஸ்வின் 8 ஓவர்கள் வீசி வெறும் 10 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அஸ்வினுக்கு எதிராக ரன்களை ஸ்கோர் செய்வது சற்றே சிரமமாக இருக்க, டாம் லாதம் கவர் திசையில் பவுண்டரி அடிக்க முயன்று விராட் கோஹ்லி வசம் பிடிபட்டார். வேகமாக விராட் கோஹ்லி தலைக்கு மேல் அடிக்கப்பட்ட பந்தை அற்புதமாக எம்பி கேட்ச் பிடித்து முதல் விக்கெட்டை வீழ்த்தினார் கோஹ்லி.
இறுதியாக எட்டிப்பார்த்த அதிர்ஷ்டம்
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தன்னுடைய சிறப்பான ஃபார்மை தொடர்ந்த டேவான் கான்வெ அரை சதத்தை பதிவு செய்தார். உள்ளே வந்த நியூசிலாந்த் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் நிதானமாக விளையாட 100 ரன்களை கடந்தது நியூசிலாந்து அணி. அப்போது பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா டேவான் கான்வெ பேடில் ஒரு பந்தை வீசினார், பத்து முறை இந்த பந்து வீசப்பட்டால் 9 முறை அது பவுண்டரி ஆக இருக்கும். அப்படி ஒரு மோசமான பந்தை அலட்சியமாக அடித்த டேவான் கான்வெ முகமது ஷமியிடம் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதற்குப் பிறகு அரை மணி நேரம் ஆட்டம் மீதம் இருந்த நிலையிலும், மைதானத்தில் போதிய வெளிச்சமின்மை ஏற்பட்டதால் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 3வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து அணி மூன்றாவது நாளை முழுமையாக கைப்பற்றியது. இந்நிலையில் இந்திய அணி மீண்டும் ஆட்டத்திற்கு உள்ளே வர நாளை விரைவாக நியூசிலாந்து அணியை அவுட் செய்ய வேண்டியது அவசியம். 4வது நாள் இந்தியா வசம் கை கூடுமா, பொறுத்திருந்து பார்ப்போம்...