Wimbledon 2023 Winner: சிதைந்த ஜோகோவிச் கனவு.. விம்பிள்டன் பட்டத்தை முதல்முறையாக கைப்பற்றிய கார்லஸ் அல்காரஸ்..!
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் கடந்த ஜூலை 3 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), ஜோகோவிச், மெத்வ தேவ் (ரஷ்யா), கேஸ்பர் ரூட் (நார்வே), ஸ்டெபானோஸ் (கிரீஸ்) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லஸ் அல்காரஸ், 2வது இடத்தில் உள்ள செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் ஆகியோர் மோதினர்.
மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் முதல் செட்டை ஜோகோவிச் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து சுதாரித்து விளையாடிய அல்காரஸ் 7-6 (8-6) என்ற கணக்கிலும், 3வது செட்டை 6-1 என்ற கணக்கிலும் வென்று அசத்தினார். 4வது செட்டை 3-6 என்ற கணக்கில் இழந்த அவர், கடைசி செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். சுமார் 4.45 மணி நேரம் நீடித்த இப்போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைந்தது. விம்பிள்டன் பட்டத்தை 20 வயதான அல்காரஸ் முதல்முறையாக கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.