ஐபிஎல் தொடரில் அசத்திய டாப்-5 பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள்
14ஆவது ஐபிஎல் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் குறித்து பார்ப்போம்.
கடந்த 13 ஆண்டுகளாக ஏப்ரல், மே மாதங்கள் வந்தாலே, அனைவருக்கும் பொழுதை போக்கக்கூடியதாக இருப்பது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர். அனைத்து கிரிக்கெட் தொடர்களை விட, ஐபிஎல் தொடரை தற்போதுள்ள இளைஞர்கள் அதிகம் விரும்புகின்றனர். போட்டியில் இருக்கும் விறுவிறுப்பும், சுவாரஸ்யமுமே இதற்கு முக்கிய காரணமாகும்.
அந்த வகையில், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாய் எதிர்பார்த்திருந்த 14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கின்றது.
இந்நிலையில், இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து அசத்திய டாப் 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 5 பவுலர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.
டாப் - 5 பேட்ஸ்மேன்கள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி 192 போட்டிகளில் விளையாடி 5,878 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளார். அவர் 193 போட்டிகளில் விளையாடி 5,368 ரன்கள் குவித்துள்ளார். கடந்த தொடரில், ரெய்னா விளையாடியிருந்தால் அவர்தான் முதலிடத்தில் இருந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 142 போட்டிகளில் விளையாடி 5,254 ரன்கள் குவித்து மூன்றாவது இடத்தில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 200 போட்டிகளில் விளையாடி 5,230 ரன்கள் குவித்து நான்காவது இடத்திலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ஷிகர் தவான் 176 போட்டிகளில் விளையாடி 5,197 ரன்கள் குவித்து ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
டாப்- 5 பவுலர்கள்
ஐபிஎல் தொடர் என்றால் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே அதிகம் இருக்கும்.. முக்கியமாக அதிரடி பேட்ஸ்மேன்கள். அவர்கள் அடிக்கும் சிக்சர், பவுண்டரிகளை பார்ப்பதற்கே ரசிகர்கள் ஆர்வத்துடன் போட்டியை காண்பார்கள். அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். பேட்ஸ்மேன்களை கொண்டாடும் இந்தத் தொடரில், பவுலிங்கில் ஜொலித்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் லஷித் மலிங்கா 122 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இவரை, கடந்த ஏலத்தில் மும்பை விடுவித்தது குறிப்பிடத்தக்கது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் அமித் மிஸ்ரா 150 போட்டிகளில் விளையாடி 160 விக்கெட்டுகள் வீழ்த்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா 164 போட்டிகளில் விளையாடி 156 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்திலும், சூப்பர் கிங்ஸ் அணி வீரர் வெய்ன் பிராவோ 140 போட்டிகளில் விளையாடி 153 விக்கெட்டுகள் எடுத்து நான்காவது இடத்திலும் உள்ளனர். கொல்கத்தா நைர் ரைடர்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் 160 போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகள் வீழ்த்தி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.