Tokyo Olympic: அனைத்து விதமான பாதுகாப்புகளுடன் ஒலிம்பிக் போட்டி - இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக்!
"பாதுகாப்பாக ஒலிம்பிக் போட்டியை நடத்தி முடிப்பதற்கு தேவையான காரியங்களில் கவனம் செலுத்துவோம்" - தாமஸ் பாக்
பெரும்பாலான வீரர்கள், அணியை சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோர் பாதுகாப்பாக ஒலிம்பிக் கிராமத்தில் தங்க வைக்கப்பட உள்ளனர், அங்கு அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேக் தெரிவித்துள்ளார். ஜப்பானில் நோயின் தீவிரம் அதிகரித்துவரும் சூழலில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இன்னும் பத்து வாரங்களுக்கும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்று பாதிப்பின் தீவிரம் காரணமாக பல்வேறு பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானியர்கள் பலர் ஒலிம்பிக் தொடரை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் இந்த வாரம் டோக்கியோ சென்று அங்கு ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொள்ள இருந்தார், ஆனால் ஜப்பானில் ஏற்பட்டுள்ள அவசர நிலை காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் நீடிப்பதால் அவர் செல்லவில்லை. இப்படி இருக்க திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா என்ற கேள்விக்கு, போட்டி ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஜப்பான் நிர்வாகிகளுடன் பேசியதன் அடிப்படையில் பதிலளித்துள்ள தாமஸ் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து நம்பிக்கையான வார்த்தைகளை வெளிப்படுத்தியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அடிப்படையான விஷயம் "ஒலிம்பிக் கிராமம் பாதுகாப்பாக இருக்கும், அங்கே பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும்" என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்..
4-வது அலையின் தீவிரத்தால் ஜப்பானில் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன, மருத்துவர்களும் நெருக்கடியான அளவில் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்ற நிலை குறித்து பேசிய அவர் கூடுதல் மருத்துவ குழு கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார். "கூடுதல் மருத்துவ குழுவினர் மருத்துவரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள், மேலும் ஒலிம்பிக் கிராமம் மற்றும் மைதானங்களில் கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வார்கள்" என தாமஸ் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருப்பவர்களில் 75 சதவீத பேருக்கு ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவது முன்பாக தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் தாமஸ் தெரிவித்தார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூடுதல் மருத்துவ குழுவை அழைத்து வரும் முடிவிற்கு டோக்கியோ 2020 போட்டிகளின் தலைவர் செய்க்கோ ஹாஷிமோட்டோ வரவேற்பை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள ஹாஷிமோட்டோ "இந்த முடிவை வரவேற்கிறோம். இது பாதுகாப்பாக போட்டிகளை நடத்தி முடிக்க மிகவும் உதவிகரமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். மேலும் வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் "விளையாட்டு வீரர்கள் தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள், பாதுகாப்பே மிகவும் அவசியமானது என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள், அதனால் பாதுகாப்பாக ஒலிம்பிக் போட்டியை நடத்தி முடிப்பதற்கு தேவையான காரியங்களில் கவனம் செலுத்துவோம்" என்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஜப்பான் அரசாங்கம் விரும்பவில்லை, திட்டமிட்டபடி போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்ற தெளிவு வீரர்கள் மத்தியில் பிறந்துள்ளது.