Afghanistan Cricket Board : "தலிபான்கள் கிரிக்கெட்டை நேசிப்பவர்கள்" - ஆப்கான் கிரிக்கெட் வாரிய சி.இ.ஓ பேச்சு
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள் கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி பேட்டி அளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் ஆட்சி பொறுப்பை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி, ஹமீது ஷின்வாரி பி.டி.ஐ.க்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில், ஆட்சி மாற்றத்தால் கிரிக்கெட் செயல்பாடுகள் ஏதும் பாதிக்கப்படுவதாக நாங்கள் கருதவில்லை. தலிபான்கள் கிரிக்கெட்டை நேசிப்பவர்கள். எங்களது தொடக்க காலத்தில் இருந்தே தலிபான்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். அவர்கள் எங்களது செயல்பாடுகளில் இடையூறு செய்ததில்லை.
நல்ல விஷயம் என்றால் நாங்கள் இயல்பு நிலையிலேயே முன்னோக்கி சென்றுவிட்டோம். எங்களது அலுவலகங்களை நாங்கள் நாளை முதல் மீண்டும் திறக்க உள்ளோம். தேசிய முகாமையும் தொடங்க உள்ளோம். இந்த ஆட்சி மாற்றத்திலும், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரானது, இலங்கையில் இரு நாட்களில் தொடங்க உள்ளது. 4 அல்லது 5 வீரர்கள் வெளிநாடுகளில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். மற்ற வீரர்கள் அனைவரும் காபூலில் உள்ளனர். அவர்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். எங்களுக்கு நன்றாக செயல்படக்கூடடிய தலைவர் உள்ளார். மறு அறிவிப்பு வரும்வரை நான் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பேன்” இவ்வாறு அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது தொடர்பாக, அந்த நாட்டின் பந்துவீச்சாளரும், உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளருமான ரஷீத்கான் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.
உலகின் மிகவும் இளமையான கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக வலம் வருகிறது, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி. கடந்த 2009-ஆம் ஆண்டுதான் அந்த அணியினர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதன் முறையாக அறிமுகமாகினர். தங்களது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை இந்தியாவிற்கு எதிராக சென்னையில் கடந்த 2018-ஆம் ஆண்டு விளையாடினர்.
உலகின் மிகவும் இளம் கிரிக்கெட் அணியாக இருந்தாலும், ஆப்கானிஸ்தான் அணி பலம் வாய்ந்த அணிகளான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளையே தங்களது சிறப்பான பேட்டிங் மற்றும் பந்துவீச்சால் பல முறை கதிகலங்க வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் இதுவரை வங்காளதேசம், அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளை வீழ்த்தியுள்ளது. 129 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி இதுவரை 62 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 63 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 1 போட்டி டையில் முடிந்துள்ளது. 14 டி20 போட்டிகளில் ஆடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.