T20 World Cup: டி20 உலகக் கோப்பையை வென்ற சாம்பியன்கள் யார்? யார்? - முழு விவரம் உள்ளே
2007ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 தொடர்களின் சாம்பியன் பட்டங்கள் வென்ற அணிகளின் முழு விவரங்களை கீழே காணலாம்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கும், இந்திய கிரிக்கெட்டிற்கும் இடையேயான உறவு எப்போதுமே மறக்க முடியாத நினைவுகள். 2005 காலகட்டங்களில் அறிமுகமான டி20 ஆட்டங்களுக்காக முதன்முறையாக 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் நடத்தப்பட்டது.
- இந்தியா ( டி20 கிரிக்கெட்டின் முதல் சாம்பியன்)
2007ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை போட்டியில் முதன்முறையாக தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி யாருமே எதிர்பாராத வகையில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலககோப்பை போட்டியின் முதல் சாம்பியன் என்ற பட்டத்தை கைப்பற்றி மாபெரும் சாதனை படைத்தது. இந்த தொடரில் சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் இல்லாமல் இளம் இந்திய அணி களமிறங்கி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
- பாகிஸ்தான்
முதல் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிடம் கோப்பையை பறிகொடுத்த பாகிஸ்தான் அணி 2009ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகக் கோப்பையில் மீண்டும் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. இந்த முறை இலங்கையுடன் இறுதிப்போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முதன்முறையாக டி20 உலககோப்பையை கைப்பற்றியது.
- இங்கிலாந்து
2010ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் உலகக் கோப்பை டி20 போட்டித்தொடர் நடைபெற்றது. இந்த முறை கிரிக்கெட் உலகில் கோலோச்சிய ஆஸ்திரேலியாவும், ஒருமுறை கூட எந்தவொரு உலகக் கோப்பை யையும் கைப்பற்றாத நிலையில் இருந்த இங்கிலாந்தும் மோதின. ஆஸ்திரேலியா நிர்ணயித்த இலக்கை எட்டிப்பிடித்த இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று முதன்முறையாக டி20 உலககோப்பையை வென்று சாதனை படைத்தது.
- மேற்கிந்திய தீவுகள்
2012ம் ஆண்டு உலகக் கோப்பை இலங்கையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயித்த இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், மேற்கிந்திய தீவுகள் அணி முதன்முறையாக உலகக் கோப்பை வென்று சாம்பியன்கள் பட்டியலில் இடம்பிடித்தது.
- இலங்கை
2014ம் ஆண்டு வங்காளதேசத்தில் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தியாவும், இலங்கையும் நேருக்கு நேர் இறுதிப்போட்டியில் மோதினர். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
- மேற்கிந்திய தீவுகள்
2016ம் ஆண்டு முதன்முறையாக டி20 உலககோப்பை இந்தியாவில் நடைபெற்றது. ஆனால், இந்த முறை இறுதிப்போட்டியில் ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இங்கிலாந்தும், மேற்கிந்திய தீவுகள் அணியும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக உலககோப்பையை கைப்பற்றியது.