Singapore Open 2022: சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் சாய்னா,பிரணாய், துருவ்-அர்ஜூன் காலிறுதியில் தோல்வி
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாய்னா நேவால், பிரணாய் ஆகியோர் காலிறுதியில் தோல்வி அடைந்துள்ளனர்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று தொடங்கியது. இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த், மஞ்சுநாத், பிரணாய், அஷ்மிதா சாலிஹா, துருவ் கபிலா-அர்ஜூன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களில் பி.வி.சிந்து, சாய்னா நேவால் மற்றும் பிரணாய் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் அர்ஜூன் மற்றும் துருவ் கபிலா ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிச் சுற்றுப் போட்டியில் சாய்னா நேவால் ஜப்பான் வீராங்கனை அயோ ஒஹாரியை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் கேமை ஒஹாரி 21-13 என்ற கணக்கில் வென்றார். அடுத்த கேமை சாய்னா நேவால் 21-15 என்ற கணக்கில் வென்று அசத்தினார். மூன்றாவது கேமிலும் சாய்னா நேவால் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒஹாரி 22-20 என்ற கணக்கில் போராடி வென்றார். அத்துடன் சாய்னா நேவாலை 21-13,15-21,22-20 என்ற கணக்கில் ஒஹாரி தோற்கடித்தார்.
பிரணாய் தோல்வி:
ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பிரணாய் உலக தரவரிசையில் 43வது இடத்திலுள்ள ஜப்பான் வீரர் நரோகாவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரணாய் 21-12 என்ற கணக்கில் வென்றார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கேமில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நரோகா 21-14 என வென்றார். அடுத்த கேமையும் நரோகா 21-18 என்ற கணக்கில் வென்றார். இதன்காரணமாக நரோகா 12-21,21-14,21-18 என்ற கணக்கில் பிரணாயை வீழ்த்தினார்.
துருவ் கபிலா-அர்ஜூன் தோல்வி:
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா-அர்ஜூன் ஜோடி இந்தோனேஷியாவை சேர்ந்த முகமது அஷான் -செட்டைவான் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்தோனேஷியா ஜோடி உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் முதல் கேமில் இந்திய இணை அசத்தலாக ஸ்மேஸ் அடித்து அசத்தியது. அத்துடன் முதல் கேமை 21-10 என்ற கணக்கில் வென்றது.
அடுத்து நடைபெற்ற இரண்டாவது கேமில் இந்தோனேஷியாவின் அஷான் -செட்டைவான் ஆகியோர் சுதாரித்து கொண்டு தங்களுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் அவர்களுக்கு இந்திய அணி ஈடு கொடுத்து விளையாடியது. ஒரு கட்டத்தில் இரு அணிகளும் தலா 17 புள்ளிகள் பெற்று இருந்தனர். இறுதியில் இந்தோனேஷியாவின் அஷான்-செட்டையான் இணை 21-18 என்ற கணக்கில் இரண்டாவது கேமை வென்றது. மூன்றாவது கேமில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தோனேஷிய ஜோடி 21-17 என வென்றது. அத்துடன் போட்டியை 10-21,21-18,21-17 என வென்று அசத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்