Ronaldo Girlfriend: "நாங்கள் தோற்கவில்லை..." போர்ச்சுக்கல் மேனஜரை வறுத்தெடுத்த ரொனால்டோ காதலி...!
காலிறுதிப் போட்டியில் ரொனால்டோவிற்கு வாய்ப்பு அளிக்காத போர்ச்சுக்கல் மேனஜரை ரொனால்டோ காதலி இன்ஸ்டாகிராமில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பல்வேறு ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும், அற்புதங்களும் அரங்கேறி வருகிறது. முன்னணி ஜாம்பவான்கள் அணிகள் எல்லாம் குட்டி அணிகளிடம் மண்ணைக் கவ்வியது.
மொராக்கோ அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் போர்ச்சுக்கல் அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், மொராக்கோ அரையிறுதிக்கு முன்னேறி அதிர்ச்சி அளித்தது. அதற்கு முக்கிய காரணம் கால்பந்து உலகின் ஜாம்பவனாகிய கிறிஸ்டியானோ ரொனால்டோவை 50 நிமிடங்கள் வரை களத்தில் இறக்காமல் பெஞ்சில் உட்கார வைத்ததுதான்.
ரொனால்டோவை களமிறக்காதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரொனால்டோவை களமிறக்காததாலே தோல்வியை சந்தித்த போர்ச்சுக்கல் அணி மேனேஜரை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
ரொனால்டோவின் காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ உங்கள் நண்பர் மற்றும் பயிற்சியாளர் தவறான முடிவை எடுத்துவிட்டார். நீங்கள் பாராட்டும் மரியாதையும் வைத்திருக்கும் அந்த நண்பர். அதே நபர் உங்களை களத்தில் இறக்கும்போது எல்லாம் எப்படி மாறியது என்பதை பார்த்தார். ஆனால், அது மிகவும் தாமதமானது.
உலகின் சிறந்த வீரரை நீங்கள் குறைத்து மதிப்பிட முடியாது. அவர் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம். வாழ்க்கை நமக்கு பாடங்களை கற்றுக்கொடுக்கிறது. இன்று நாம் தோற்கவில்லை. நாம் கற்றுக்கொண்டுள்ளோம். நாங்கள் உங்களை பாராட்டுகிறோம்”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
ரொனால்டோவை களத்தில் இறக்காததால் போர்ச்சுக்கல் அணி 1-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. உலகக்கோப்பை கனவு நொறுங்கியதால் ரொனால்டோ மைதானத்திலே கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி கால்பந்து ரசிகர்கள் அனைவரின் இதயத்தையும் நொறுங்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ரொனால்டோவின் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு அவரின் சகோதரிகளும் இன்ஸ்டாவில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.