ப்ளூ ஜெர்ஸியில் திங்கட்கிழமை இறங்கும் ஆர்சிபி- காரணம் என்ன?
ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி ப்ளூ ஜெர்ஸி அணிந்து விளையாட உள்ளது.
2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மே மாதம் பாதியில் ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாவது பாதியை யுஏஇயில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தன்னுடைய முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தப் போட்டி வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் ஆர்சிபி வழக்கமாக இருக்கும் சிவப்பு நிற ஜெர்ஸிக்கு பதிலாக ப்ளூ ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளது. இது தொடர்பாக ஆர்சிபி அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி இந்த முடிவை அறிவிக்கிறார். அத்துடன் எதற்காக இந்த முடிவு என்பதையும் அவர் விளக்குகிறார். அவரை தொடர்ந்து ஏபி டிவில்லியர்ஸ் உள்ளிட்ட சில வீரர்களும் தங்களுடைய ப்ளூ ஜெர்ஸி தொடர்பாக அந்த வீடியோவில் பேசுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
RCB to wear Blue Jersey v KKR on 20th
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 14, 2021
We at RCB are honoured to sport the Blue kit, that resembles the colour of the PPE kits of the frontline warriors, to pay tribute to their invaluable service while leading the fight against the Covid pandemic.#PlayBold #1Team1Fight pic.twitter.com/r0NPBdybAS
அதன்படி ஆர்சிபி அணி எப்போதும் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பச்சை நிற ஜெர்ஸியை அணிந்து விளையாடும். அந்தவகையில் இம்முறை பச்சை நிற ஜெர்ஸிக்கு பதிலாக நில நிற ஜெர்ஸியில் ஒரு போட்டியில் விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் வரும் வருமானம் உள்ளிட்டவற்றை மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கு பயனளிக்கும் வகையில் கொடுக்கப்படும் என்று ஆர்சிபி தரப்பில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பெருஞ்தொற்று காலத்தில் பிபிஇ கிட் அணிந்து அவர்கள் ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் இந்த நில நிற ஜெர்ஸியை ஆர்சிபி அணி அணிந்து விளையாட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் ஆர்சிபி அணி 7 போட்டிகளில் 5 வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. எனவே இரண்டாவது பாதியிலும் சிறப்பாக விளையாடி இம்முறையாவது ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஆர்சிபி அணி முழு முனைப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: `ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் நீக்கம்!’ : ஏன் தெரியுமா?